EVENTMEDIA STATEMENT

சிலாங்கூர் ஆட்சியாளர் அவமதிப்பு- சனுசி மீது இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்

ஷா ஆலம், ஜூலை 18- சிலாங்கூர் அரச அமைப்பை ஏளனப்படுத்தும் வகையில்  பேசியதாக கூறப்படுவது தொடர்பில் பெரிக்கத்தான் நேஷனல் தேர்தல் தலைமை இயக்குநர் மீது இங்குள்ள இரு செஷன்ஸ் நீதிமன்றங்களில் இன்று குற்றஞ்சாட்டப் படவுள்ளது.

இம்மாதம் 11ஆம் தேதி செலாயாங்கில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய டத்தோஸ்ரீ முகமது சனுசி முகமது நோர் சிலாங்கூர் மந்திரி புசாரை நியமனம் செய்தது குறித்து மாநில அரச அமைப்பை அவமதித்ததோடு அதன் நம்பகத்தன்மை  குறித்தும் கேள்வியெழுப்பியதாக கூறப்படுகிறது.

அந்த பாஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்  இங்குள்ள செஷன்ஸ் 1 மற்றும் செஷன்ஸ் 2 நீதிமன்றங்களில் நீதிபதிகள் ஓஸ்மான் அப்பாண்டி முகமது சாலே மற்றும் நீதிபதி நோர் ரஜியா மாட் ஜின் ஆகியோர் முன்னிலையில் குற்றச்சாட்டை எதிர்நோக்குவார்.

சனுசிக்கு எதிராக தண்டனைச் சட்டம், நிந்தனைச் சட்டம் மற்றும் தொடர்பு மற்றும் பல்லுடகச் சட்டம் ஆகியவற்றின் கீழ் குற்றச்சாட்டு கொண்டு வரப்படலாம் என கூறப்படுகிறது.

முன்னதாக, அரச அமைப்புக்கு எதிராக சனுசி அவமரியாதையாக பேசிய  விவகாரம் முடிவுக்கு வரவில்லை என்று மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் கூறியிருந்தார்.

இவ்விவகாரம் தொடர்பில் சிலாங்கூர் அரச மன்ற உறுப்பினர்கள் இங்குள்ள செக்சன் 6 போலீஸ் நிலையத்தில் கடந்த 14ஆம் தேதி புகார் செய்திருந்தனர்.


Pengarang :