ECONOMYMEDIA STATEMENTNATIONAL

அனைத்து 56 தொகுதிகளிலும் உள்ள மலிவு விலை, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வர்ணம் பூச வெ.2 கோடி ஒதுக்கீடு

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 19- மோசமான நிலையிலுள்ள மலிவு விலை வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வர்ணம் பூசும் திட்டத்திற்காக மாநில அரச 2 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

சிலாங்கூர் பென்யாயாங் முன்னெடுப்பின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்த திட்டத்திற்காக மாநிலத்திலுள்ள அனைத்துத் தொகுதிகளுக்கும் இவ்வாண்டு தொடக்கம் முதல் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டதாக வீடமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

இந்த திட்டத்தின் கீழ் நீண்ட நாட்களாக கவனிப்பாற்றுக் கிடக்கும் குடியிருப்புகளுக்கு வர்ணம் பூசி புதுப்பொலிவை ஏற்படுத்தவிருக்கிறோம். இந்த திட்டம் இவ்வாண்டு தொடக்கம் முதல் மேற்கொள்ளப்படுகிறது. கோலக் கிள்ளான் போன்ற பகுதிகளில் இந்த திட்டம் முற்றுப்பெற்ற வேளையில் ஷா ஆலம் மற்றும் சிப்பாங்கில் வர்ணம் பூசும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது ஒரு குடியிருப்பு பகுதியை சீரமைத்து வர்ணம் பூசுகிறோம். அந்த திட்டம் பிபிஆர் எனப்படும் மக்கள் வீடமைப்புத் திட்டமாக அல்லது மலிவு விலை குடியிருப்பாக இருக்க வேண்டிய  அவசியமில்லை என்றார் அவர்.

முன்னதாக, ஊராட்சி மன்ற மேம்பாட்டு அமைச்சர் ஙா கோர் மிங் தலைமையில் இங்குள்ள கோத்தா டாமன்சாரா அடுக்குமாடி குடியிருப்பின் லிப்ட் மாற்று தொடக்க நிகழ்வில் ரோட்சியா கலந்து கொண்டார்.

பிபிஆர் கோத்தா டாமன்சாரா மலிவு விலை குடியிருப்பின் நான்கு புளோக்குகளில் உள்ள 12 லிட்டுகள் 37 லட்சம் வெள்ளி செலவில் புதிதாக மாற்றப்பட்டன.


Pengarang :