ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

நிலச்சரிவு அபாயமுள்ள இடங்களை அடையாளம் காண மாநில அரசு ஆய்வு

உலு சிலாங்கூர், ஜூலை 19- மாநிலம் முழுவதும் நிலச்சரிவு அபாயமுள்ள இடங்களை அடையாளம் காண்பதற்காக சிலாங்கூர் அரசு விரிவான ஆய்வினை மேற்கொண்டு வருகிறது.

விரும்பத்தகாத சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதி செய்ய இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.

சிலாங்கூரில் நிலச்சரிவு ஒரு முறை மட்டுமல்ல, பத்தாங் காலி, புக்கிட் பெர்மாய் உள்ளிட்ட இடங்களில் பல முறை நிகழ்ந்துள்ளது. இதன் காரணமாகவே நாம் ஆபத்து நிறைந்த இடங்களை அடையாளம் காண நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார் அவர்.

மாநில கனிம வள மற்றும் புவி அறிவியல் துறை, பொதுப்பணி இலாகா, ஊராட்சி மன்றங்கள், நில மற்றும் மாவட்ட அலுவலகம் மற்றும் இதில் தொடர்புடையத் தரப்பினரின் ஒத்துழைப்புடன் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.

ஜாலான் பத்தாங் காலி- கெந்திங் ஹைலண்ட்ஸ் சாலையில் மேற்கொள்ளப்படும் மலைச்சரிவை சீரமைக்கும் பணிகளை நேற்று பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

இந்த ஆய்வு தொடர்பான அறிக்கை கிடைத்தவுடன் நிலச்சரிவு சம்பவங்களைத் தடுப்பதற்கான சிறந்த வழிகளை மாநில அரசு ஆராயும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்தாண்டு டிசம்பர் 16ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட கெந்திங் ஹைலண்ட்ஸ்- பத்தாங் காலி சாலை பகுதி தற்போது வலுவாக உள்ளதோடு அப்பகுதியைச் சுற்றிலும் மண் நகர்வு காணப்படவில்லை என்று இவர் கூறினார்.


Pengarang :