ECONOMYMEDIA STATEMENTNATIONAL

56 முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு ஊராட்சி மன்ற மேம்பாட்டு அமைச்சு வெ.74.5 லட்சம் மானியம்

சுங்கை பூலோ, ஜூலை 19- நாட்டிலுள்ள 56 முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு ஊராட்சி மன்ற மேம்பாட்டு அமைச்சு 74 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி மானியமாக வழங்கியுள்ளது.

முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் இடமிருந்து 700 விண்ணப்பங்கள்  கிடைக்கப்பெற்ற  வேளையில் அவற்றில்  56 விண்ணப்பங்களுக்கு அங்கீகாரம் வழங்கப் பட்டதாக அதன் அமைச்சர் ஙா கோர் மிங் கூறினார்.

நாடு முழுவதும் உள்ள முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களில் பராமரிப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்வதற்காக ஒற்றுமை அரசாங்கம் வழங்கிய 5 கோடி வெள்ளி நிதியில் இது ஒரு பகுதியாகும் என்று அவர் தெரிவித்தார்.

வழிபாட்டுத் தலங்கள் இடமிருந்து இதுவரை கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களில் தகுதியானவற்றைத் தேர்ந்தெடுக்கும் பணியில் அமைச்சின் பணிக்குழு ஈடுபட்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதன் மூலம் உகந்த சூழலில் சமய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இந்த மானியம் பெரிதும் துணை புரியும் என நான் நம்புகிறேன் என்றார் அவர்.

நேற்று இங்குள்ள வான துர்க்கை அம்மன் ஆலய நிர்வாகத்தினரிடம் 109,200 வெள்ளி மானியத்திற்கான மாதிரி காசோலையை ஒப்படைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த துர்க்கை அம்மன் ஆலயம் தவிர சிலாங்கூரில் மேலும் ஏழு ஆலயங்களுக்கு இத்திட்டத்தின்கீழ் மானியம் வழங்கப்பட்டதாகவும் ஙா கூறினார்.

 செலாயாங் பாரு ஸ்ரீ ராமர் ஆலயம் (102,200 வெள்ளி), பத்து கேவ்ஸ் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம் (187,300 வெள்ளி), கோல சிலாங்கூர் ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலயம் (51,685.28 வெள்ளி), சபாக் பெர்ணம் திருமுருகன் ஆலயம் (79,000 வெள்ளி), சுங்கை பூலோ, டேசா அமான் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் (57,700 வெள்ளி), கிளன்மேரி, தாமான் லாடாங் ஜெயா, ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் (142,300 வெள்ளி), பெட்டாலிங் ஜெயா கீதா ஆசிரமம் (110,000 வெள்ளி) ஆகியவையே அமைச்சிடமிருந்து நிதியுதவி பெற்ற இதர வழிபாட்டுத் தலங்களாகும்.


Pengarang :