ECONOMYNATIONAL

அரசின் தொடர்ச்சியான கண்காணிப்பின் வழி பொருள்களின் விலை உயர்வு காணவில்லை- அமைச்சர் தகவல்

கோல திரங்கானு, ஜூலை 19- விரைவில் நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தலை முன்னிட்டு பொருள் விலையேற்ற விவகாரத்தை ஆயுதமாக பயன்படுத்தும் எதிர்கட்சிகளின் செயலை உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோஸ்ரீ சலாவுடின் ஆயோப் சாடினார்.

அரசாங்கத்தின் உதவித் தொகை பெறாத பொருள்களின் விலையை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து வருவதால் பொருள்களின் விலை உயர்வு காணவில்லை என்று அமானா கட்சியின் துணைத் தலைவருமான அவர் தெரிவித்தார்.

கோதுமை மாவு, சீனி போன்றவை அரசாங்கத்தின் கட்டுப்படுத்தப்பட்ட பொருள்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளதால் அவை விலையேற்றம் காணவில்லை. விலைக்கட்டுப்படுத்தப்படாத மற்றப் பொருள்களைப் பொறுத்தவரை அவற்றைத் தேர்ந்தெடுப்பது பயனீட்டாளர்களைப் பொறுத்ததாகும் என அவர் சொன்னார்.

வாழ்க்கைச் செலவின அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மக்களின் வாழ்க்கைச் செலவுகளை நாம் கட்டுப்படுத்த முடியாது. இதைத்தான் நான் வலியுறுத்த விரும்புகிறேன். தற்போதைக்கு அத்தியாவசியப் பொருள்கள் யாவும் அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்றார் அவர்.

நேற்று இங்கு நடைபெற்ற்ற பத்து புரோக் தொகுதி நிலையிலான மடாணி ஒற்றுமை பயணத் தொடர் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

பாயோங் ரஹ்மா முன்னெடுப்பு குறிப்பாக ரஹ்மா விற்பனை மற்றும் மெனு ரஹ்மா திட்டங்கள் பி40 தரப்பினர் மற்றும் பரம ஏழைகளை இலக்காக கொண்டு உருவாக்கப்பட்டன. இத்திட்டத்தின் மூலம் தங்கள் வருமானத்திற்கேற்ப பொருள்களை வாங்குவதற்குரிய வாய்ப்பு அவர்களுக்கு கிட்டுகிறது என அவர்  சொன்னார்.


Pengarang :