ECONOMYMEDIA STATEMENTNATIONAL

36 அடிப்படை வசதித் திட்டங்களை மேம்படுத்த 7.34 கோடி வெள்ளி ஒதுக்கீடு- எம்.பி.எஸ்.ஜே. தகவல்

சுபாங் ஜெயா, ஜூலை 21- இவ்வாண்டில் 7 கோடியே 34 லட்சம் வெள்ளி செலவில் 36 முக்கிய அடிப்படை வசதி திட்டங்களை மேற்கொள்ள சுபாங் ஜெயா மாநகர் மன்றம் திட்டமிட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலை தணிப்பதற்கு ஏதுவாக 5 கோடியே 15 லட்சம் வெள்ளி செலவில் பெர்சியாரான் கெவாஜிப்பான்-பெர்சியாரான் சுபாங் பெர்மாய் சாலை சந்திப்பில் அடுக்குச் சாலை சந்திப்பை நிர்மாணிப்பதும் அத்திட்டங்களில் அடங்கும் என்று மாநகர் மன்ற துணை டத்தோ பண்டார் முகமது ஜூல்கர்னாய்ன் சே அலி கூறினார்.

சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தின் வரலாற்றில் 100 விழுக்காடு சொந்த நிதியில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய திட்டமாக இது விளங்குகிறது. மக்கள் நலனில் மாநகர் மன்றம் கொண்டுள்ள அக்கறையை இது புலப்படுத்துகிறது என்று அவர் சொன்னார்.

வரும் 2025ஆம் ஆண்டில் முற்றுப் பெறும் என எதிர்பார்க்கப்படும் இந்த திட்டத்தின் மூலம் யுஎஸ்ஜே.1 பகுதியைச் சேர்ந்த 15,000 பேர் பயன்பெறுவர் என அவர் தெரிவித்தார்.

தாமான் சவுஜானா பூச்சோங்கில் காம்ப்ளெக்ஸ் பென்யாயாங் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார். இந்த நிகழ்வுக்கு பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் தலைமை தாங்கினார்.

மண்டப வடிவிலான இந்த தொகுதியில் திருமணம், விருந்து உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்துவதற்கு பயன்படுத்துவது உள்பட பல்வகை பயன்களுக்கு உகந்த மைதானம் கழிப்பறை, கார் நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகள் உள்ளடங்கியுள்ளன.

இது தவிர, சுமார் 15 லட்சம் வெள்ளி செலவில் தாமான் தாசேக் ஸ்ரீ செர்டாங்கில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மேடான் செலேரா உணவு விற்பனை மையம் இன்னும் இரு மாதங்களில் செயல்படத் தொடங்கும் என்றும் அவர் ஜூல்கர்னாய்ன் தெரிவித்தார்.


Pengarang :