ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மலேசிய அனைத்துலக கவனத்தை பெரிதும் ஈர்த்து வருகிறது- முதலீடுகளைக் கவர்வதற்கான வாய்ப்பு அதிகரிப்பு

உலு கிளாங், ஜூலை 22- அனைத்துலக நாடுகளின் கவனத்தை பெரிதும் ஈர்த்து வருவதன் காரணமாக வெளிநாட்டுத் தலைவர்களின் வருகையும் வெளிநாடுகளுக்கு வருகைபுரிய அழைப்பும் நாட்டிற்கு அதிகரித்து வருகிறது.

இந்த சாதகமான மேம்பாடு காரணமாக பிற நாடுகளுக்கிடையிலான நட்புறவு வலுப்பெறும் அதே வேளையில் முதலீடுகள் பெருகுவதற்குரிய வாய்ப்பும் கிட்டுவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

நாட்டிற்கு வருகை தரவுள்ள தலைவர்களில் பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டிணன்ட் மார்க்கோஸ் ஜேஆர் மற்றும் புருணை சுல்தான் ஹஸாசானால் போல்கியா ஆகியோரும் அடங்குவர் என அவர் சொன்னார்.

பல ஆண்டுகளாக மலேசியாவுக்கு வராமல் இருந்த பிலிப்பைன்ஸ் அதிபர் வரும் புதன் கிழமை நாட்டிற்கு வரவுள்ள நிலையில் சுல்தான் ஹஸாசானால் போல்கியா வரும் ஆகஸ்டு மாதம் வருகை புரியவிருக்கிறார் என அவர் தெரிவித்தார்.

மலேசியாவை மகத்தான நாடாக மற்றவர்கள் பார்க்கிறார்கள். பல நாட்டுத் தலைவர்கள் எனக்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஆசியான் நாடுகள் தவிர்த்து வேறு நாடுகளுக்கு நான் பயணம் மேற்கொள்ளவில்லை. முதலில் ஆசியான் நாடுகளுக்கு வருகை புரிய வேண்டும். அதன் காரணமாகத்தான் வியட்னாமுக்கு நான் பயணம் மேற்கொண்டேன் என அவர் சொன்னார்.

இங்குள்ள தாமான் கிராமாட்டில் நேற்றிரவு நடைபெற்ற உலு கிளாங் மக்களுடன் பிரதமர் எனும் நிகழ்வில் உரையாற்றிய போது பிரதமர் இதனைத் கூறினார்.

சவூதி அரேபியாவுக்கு வருகை புரியும்படி கோரும் அதிகாரப்பூர்வ கடிதத்தை தாம் அந்நாட்டு பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானிடமிருந்து தாம் பெற்றதாக அன்வார் இரு தினங்களுக்கு முன்னர்  கூறியிருந்தார்.


Pengarang :