ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

சுங்கை காண்டீஸ் தொகுதியில் 11 லட்சம் வெள்ளி செலவில் 29 மேம்பாட்டுத் திட்டங்கள் அமல்

ஷா ஆலம், ஜூலை 22- சுங்கை காண்டீஸ் சட்டமன்றத் தொகுதியில் சிலாங்கூர் பென்யாயாங் (பி.எஸ்.பி.) திட்டத்தின் கீழ் 11 லட்சத்து 95 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள மேம்பாட்டுத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இந்த பி.எஸ்.பி. முன்னெடுப்பின் கீழ் மொத்தம் 29 மேம்பாட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொகுதியின் நடப்பு உறுப்பினரான முகமது ஜவாவி அகமது முக்னி கூறினார்.

இந்த நிதி ஒதுக்கீட்டில் 695,000 வெள்ளி கடந்தாண்டிலும் மேலும் 500,000 வெள்ளி இவ்வாண்டு ஜூலை வரையிலும் செலவிடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்த நிதியைக் கொண்டு பாலர் பள்ளிகள், பள்ளிகள், வடிகால்கள் மற்றும் சாலைகள் சீரமைக்கப்பட்டதோடு சோலார் தெரு விளக்குகளும் பொருத்தப்பட்டதாக அவர் சொன்னார்.

நகரமய விரிவாக்கத்தின் எதிரொலியாக ஏற்படும் கனரக வாகனங்களின் போக்குவரத்து அதிகரிப்பு சாலைகள் பழுதடையக் காரணமாக அமைவதால் புறநகர் பகுதிகளின் மேம்பாட்டிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. 

அதே சமயம், வடிகால்களிலும் புதர்கள் மண்டி விடுவதால் நீரோட்டம் தடைபடுகிறது. ஆகவே, இப்பிரச்சனைகளைக் களைவதற்கான வழிவகைகளை நாம் ஆராய வேண்டியுள்ளது என  அவர் தெரிவித்தார்.

மாநிலத்தின் அனைத்து 56 தொகுதிகளிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக மாநில அரசு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் இந்த பி.எஸ்.பி. திட்டத்தை அமல்படுத்தியது.

மக்களுக்கு பயன்தரக்கூடிய சிறு திட்டங்களை அமல்படுத்துவதன் மூலம் வட்டார பொருளாதாரத்திற்கு புத்தயிரூட்டும் நோக்கில்  2 கோடியே 80 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்படுவதாக புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறியிருந்தார்.


Pengarang :