EKSKLUSIFMEDIA STATEMENT

வேட்பாளரை அறிவோம்-   தீபன் சுப்பிரமணியம் (புக்கிட் மெலாவத்தி தொகுதி)

ஜூலை 25- அடுத்த மாதம் 12ஆம் தேதி நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தலில் கெஅடிலான் கட்சியின் சார்பில் சிலாங்கூர் மாநிலத்தில் போட்டியிடவுள்ள இரு வேட்பாளர்களில் ஒருவராக தீபன் சுப்பிரமணியம் விளங்குகிறார்.
புக்கிட் மெலாவத்தி தொகுதியில் பக்கத்தான் ஹராப்பான்- பாரிசான் நேஷனல் கூட்டணியைப் பிரதிநிதித்துப் போட்டியிடவிருக்கும் 35 வயதான தீபன், சிலாங்கூர் மாநிலத்தின் பந்திங் நகரை தனது பூர்வீகமாகக் கொண்டவர். அவர் தனது எஸ்.டி.பி.எம். கல்வியை பந்திங், தெலுக் டத்தோ மேல் இடைநிலைப்பள்ளியில் முடித்து சட்டத் துறையில் இளங்கலைப் பட்டத்தை இங்கிலாந்தின் நோர்தம்பரியா பல்கலைக்கழகத்தில் பெற்றார்.
வழக்கறிஞர் நிறுவனம் ஒன்றில் சட்ட நிர்வாகியாகவும் ஸ்மார்ட் மூவ் ரிசோர்சஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும்  பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லியின் சிறப்பு பணிகளுக்கான அதிகாரியாகவும் இவர் பணி புரிந்து வருகிறார்.
கடந்த 2016 முதல் 2018 வரை சிலாங்கூர் மாநில கெஅடிலான் இளைஞர் பிரிவு துணைத் தலைவராகவும் 2018 முதல் 2022 வரை கெஅடிலான் கட்சியின் தேசிய இளைஞர் பிரிவின் உதவித் தலைவராகவும் தீபன் சேவையாற்றியுள்ளார்.
தற்போது அவர் கோல சிலாங்கூர் கெஅடிலான் தொகுதியின் தலைவர் பொறுப்பை வகித்து வரும் அதே வேளையில் கட்சியின் மத்திய ஏற்பாட்டுகுழு துணைத் தலைமைச் செயலாளர், கட்சியின் திட்டமிடல் மற்றும் கொள்கை ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் ஆகிய பொறுப்புகளையும் ஏற்று தீபன் திறம்பட செயலாற்றி வருகிறார்.
குறைந்த வருமானம் பெறும் தரப்பைச் சேர்ந்த இந்திய தொழில் முனைவோருக்கு வர்த்தக உபகரணங்கள் மற்றும்  கைத்தொழில் பயிற்சிகளை வழங்கி அவர்களை பொருளாதார ரீதியில் உயர்த்துவதை நோக்கமாக கொண்ட “சித்தம்“ எனப்படும் சிலாங்கூர் இந்திய தொழில் ஆர்வலர் மையத்தை தோற்றுவித்த பெருமை தீபன் சுப்பிரமணியத்தைச் சாரும்.
மேலும், கோல சிலாங்கூர் சமூக நல உருமாற்றத் சங்கத்தின் நிறுவனராகவும் தலைமைத்துவத்திற்கான அனைத்துலக அகாடமியின் முன்னாள் மாணவராகவும் தீபன் விளங்குகிறார்.

Pengarang :