ECONOMY

ஏழ்மை ஒழிப்பில் சிலாங்கூரின் பங்களிப்பாக – பிங்காஸ் என்ற பி 40 தரப்பு மக்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் திட்டம்.

ஷா ஆலம் ஜூலை  25;- வசதி குறைந்த பி40 தரப்பு மக்களின் பொருளாதாரச் சுமையைக் குறைப்பதற்கு ஏதுவாக உதவித் தொகையை ரொக்கமாக வழங்கும் சிலாங்கூர் நல்வாழ்வுத் திட்டத்தை மாநில அரசு இவ்வாண்டு தொடங்கி வெற்றிகரமாக அமல்படுத்தி வருகிறது
பிங்காஸ் எனப்படும் இத்திட்டத்தின் கீழ் தகுதி உள்ள குடும்பங்களுக்கு மாதம் 300 ரிங்கிட் அல்லது வருடத்திற்கு 3,600 ரிங்கிட் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.
பத்து கோடியே 80 லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீட்டில் சிலாங்கூர் அரசு அமல்படுத்தியுள்ள இத்திட்டத்தின் வாயிலாக மாநிலத்திலுள்ள 30,000 வறிய குடும்பங்கள் பெறுவதற்குரிய வாய்ப்பு கிட்டியுள்ளது.
“கிஸ்“ எனப்படும் அன்னையர்களுக்கான பரிவு உதவித் திட்டம் மற்றும் “கிஸ் ஐ.டி“. எனப்படும் தனித்து வாழும் தாய்மார்களுக்கான உதவித் திட்டம் ஆகியவற்றின் கீழ் ஏழ்மை நிலையிலுள்ள குடும்பங்களுக்கு மாதம் 200 ரிங்கிட் உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது.
தற்போது இவ்விரு திட்டங்களும் பிங்காஸ் என்ற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்டு மாதாந்திர உதவித் தொகையும் 300 ரிங்கிட்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இத்திட்டத்தின் கீழ் உதவி பெறுவோரின் எண்ணிக்கையும் 21,000 பேரிலிருந்து 30,000 பேராக உயர்வு கண்டுள்ளது.
மாதம் 3,000 ரிங்கிட்டுக்கும் குறைவாக மாதம் வருமானம் பெறுவோருக்கு இத்திட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படுகிறது. சிலாங்கூரில் பிறந்தவர்களாகவும் அல்லது 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிலாங்கூரில் வசிப்பவர்களாகவும் சிலாங்கூர் வாக்காளர்களாகவும் குடும்பத்தில் 18 வயதுக்கும் கீழ்ப்பட்ட பிள்ளைகளைக் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும் என்பது இத்திட்டத்தில் பங்கு பெறுவதற்கான கூடுதல் நிபந்தனைகளாகும்


Pengarang :