SELANGOR

கோத்தா கெமுனிங் தொகுதியில் பக்கத்தான் வெற்றிக்கு ஒன்றிணைந்து பாடுபடுவோம்- கணபதிராவ் வீரமன் வேண்டுகோள்

ஷா ஆலம், ஜூலை 26- பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின்
கோட்டையாக விளங்கி வரும் கோத்தா கெமுனிங் சட்டமன்றத்
தொகுதியில் எதிர்வரும் மாநிலத் தேர்தலில் தக்க வைத்துக் கொள்வதற்கு
அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்று
அத்தொகுதியின் நடப்பு உறுப்பினரான வீ.கணபதிராவ் கேட்டுக் கொண்டார்.

நமக்கிடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்
அவற்றையெல்லாம் ஒதுக்கி விட்டு மாநிலத்தில் பக்கத்தான் ஹராப்பான்
தலைமையிலான அரசாங்கம் நிலைக்கவும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராஹிமுக்கு ஆதரவளிக்கவும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்
என அவர் கேட்டுக் கொண்டார்.

நேற்றிரவு இங்குள்ள செக்சன் 25, அஸாலியா மண்டபத்தில் கோத்தா
கெமுனிங் தொகுதிக்கான வேட்பாளர் எஸ். பிரகாஷை சமூக வட்டாரத்
தலைவர்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வின் போது மாநில ஆட்சிக்குழு
உறுப்பினருமான இவ்வாறு தெரிவித்தார்.

மாநில அரசாங்கத்தைப் பொறுத்த வரை இந்த தேர்தல் மிகவும்
முக்கியமானது. பக்கத்தான் மற்றும் பாரிசான் நேஷனல் கூட்டணியின்
வெற்றியை உறுதி செய்ய ஒவ்வொரு ஓட்டும் இன்றியமையாதது.
ஆகவே, நமது வேட்பாளர் பிரகாஷின் வெற்றியை உறுதி செய்ய
கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் கடுமையாகப் பாடுபட வேண்டும் என்றார்
அவர்.

கோத்தா கெமுனிங் தொகுதியில் கடந்த ஐந்தாண்டுகளாக சட்டமன்ற
உறுப்பினராக சேவையாற்றிய போது பல்வேறு மக்கள் நல மற்றும்
அடிப்படை மேம்பாட்டுத் திட்டங்களை தாம் அமல்படுத்தியதாக கூறிய
கணபதிராவ், மக்கள் நலன் சார்ந்த இத்தகைய திட்டங்கள் தொடர்ந்து
மேற்கொள்ளப்படுவதற்கு ஏதுவாக புதிய வேட்பாளர் பிரகாஷ் வெற்றி
பெறுவது மிகவும் அவசியமானது என்றார்.

இதனிடையே, இந்நிகழ்வில் உரையாற்றிய, ஷா ஆலம் மாநகர் மன்ற
உறுப்பினர் வீ.பாப்பாராய்டு, இத்தொகுதியில் வேட்பாளர் நியமனத்தில்
ஏற்பட்ட மாற்றங்களை பொருட்படுத்தாமல் பக்கத்தானின் அனைத்து
உறுப்புக் கட்சி பொறுப்பாளர்களும் வேட்பாளர் பிரகாஷின் வெற்றிக்குப்
பாடுபட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

கட்சியின் தலைமைத்துவதற்கு நாம் கட்டுப்படுவதோடு அதன் முடிவுகளை
நாம் முழு மனதாக ஏற்றுக் கொள்கிறோம். கட்சி முன்னிறுத்தியுள்ள
வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்வதற்கு அனைவரும் ஒன்றிணைந்து
பாடுபடுவோம் என்று அவர் சொன்னார்.

கோத்தா கெமுனிங் தொகுதியில் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியைப்
பிரதிநிதித்து ஜசெகவைச் சேர்ந்த பாப்பாராய்டு போட்டியிடுவார் என முன்பு
பரவலாகக் கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வின் முடிவில் உரையாற்றிய கோத்தா கெமுனிங் தொகுதிக்கான
பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் பிரகாஷ், தமக்கு ஆதரவளித்த
கணபதிராவ், பாப்பாராய்டு மற்றும் அனைத்து கட்சிகளின்
பிரதிநிதிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.


Pengarang :