EKSKLUSIFMEDIA STATEMENT

ஒற்றுமை அரசு வலுவுடன் உள்ளது-அசைப்பது அவ்வளவு எளிதல்ல- பிரதமர்

ஷா ஆலம், ஜூலை 30– மொத்தம் 19 கூட்டணிக் கட்சிகளை உள்ளடக்கிய நடப்பு ஒற்றுமை அரசாங்கம் மிகவும் வலுவுடனும் நிலைத்தன்மையுடனும் உள்ளதோடு அதனை வீழ்த்துவதென்பது அவ்வளவு எளிதல்ல என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதிபடக் கூறினார்.

கடந்தாண்டு நவம்பர் மாதம் ஆட்சியை அமைத்ததை விட தற்போது அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவர்கள் உள்பட அனைத்து தலைவர்களின் ஒத்துழைப்பும் மேலும் வலுப்பெற்றுள்ளதோடு அதனை அசைத்துப் பார்ப்பதும் அவ்வளவு எளிதான காரியமல்ல என்று பக்கத்தான் ஹராப்பான் தலைவருமான அவர் சொன்னார்.

நாம் தொடக்கத்தில் அரசாங்கத்தை அமைத்த போது அரசாங்கத்தைக் கைப்பற்றுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தொடர்பில் பலவிதமான கதைகளை உலாவின. இந்த கதைகள் 2023ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்யும் வரை மாதந்தோறும் பரப்பப்பட்டன. 

இப்போது வரும் ஆகஸ்டு மாதம் அரசாங்கம் மாற்றம் காணும் என்ற கதை பரவி வருகிறது. இவை யாவும் வெறும் வெற்று வாதங்களே என அவர் குறிப்பிட்டார்.

இந்த கதைகளைக் கேட்டு விடாதீர்கள். நம்பியும் விடாதீர்கள். இப்போது நாம் (அரசாங்கம்) வலுவுடன் உள்ளோம். அரசாங்கத்தைக் காப்பதற்கு ஒற்றுமை அரசில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து நிற்கின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநிலத் தேர்தலை முன்னிட்டு இங்குள்ள சுபாங் பெஸ்தாரியில் நடைபெற்ற  ஆருஸ் மேரா கூனிங் தேர்தல் பிரசாரத்தின் போது அவர் இவ்வாறு சொன்னார்.

இந்த நிகழ்வில் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, கோத்தா டாமன்சாரா வேட்பாளர் முகமது இஸூவான் அகமது காசிம், பாயா ஜாராஸ் வேட்பாளர் முகமது கைருடின் ஓத்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Pengarang :