ECONOMYEKSKLUSIF

அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்பட வேண்டும்- கியூபெக்ஸ் கோரிக்கை

கோத்தா பாரு, ஆக 2 – அரசு ஊழியர்களின் நிலையான ஊதியத்தை குறைந்தபட்சம் 100 வெள்ளி உயர்த்த வேண்டும் என்று அரசு ஊழியர் தொழிற்சங்க மான   (கியூபெக்ஸ்)  அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தனது தலைமையிலான குழு ஜூலை 18ஆம் தேதி பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமை சந்தித்து அரசு ஊழியர்களின் நலன்  தொடர்பான விஷயங்கள் பற்றி விவாதித்ததாக  அதன் தலைவர் டத்தோ அட்னான் மாட் கூறினார்.

அரசாங்கத்தால் அறிவிக்கப் படும் ஊதிய உயர்வு 100 வெள்ளிக்கும் குறைவாக இருக்காது என்று நம்புகிறோம்.  ஜனவரியில் நடைமுறைப் படுத்தப்பட்ட 100 வெள்ளி சிறப்பு சம்பள உயர்வுக்கு இணையானதாக இது இருக்கும் என்று அவர் சொன்னார்.

நிலையான ஊதியம் கடந்த 10 ஆண்டுகளாக அரசாங்கத்தால் மறு ஆய்வு செய்யப்படாததால்  இது ஒரு நியாயமான அதிகரிப்பாக நாங்கள் பார்க்கிறோம்  என்று அவர் தெரிவித்தார்.

பொது சேவைத் துறையின்  கிழக்கு  மண்டலத்திற்கான மலேசியா மடாணி ஆய்வரங்கை நேற்று இங்கு தொடங்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

கல்வியாளர்கள் உட்பட அரசு ஊழியர்களுக்கு சீரமைக்கப்பட்ட நிலையான ஊதியம் குறித்து இந்த மாதம்  பிரதமர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுவதாக  ஊடகங்கள் முன்னதாகத் தெரிவித்திருந்தன.

மலேசிய ஊதியத் திட்டம் (எஸ்.எஸ்.எம்.) அரசாங்கத்தால் இறுதி செய்யப் படுவதற்கு முன்னர் நிலையான ஊதியம் விரைவில் வழங்கப்படும் என்று கியூபெக்ஸ் எதிர் பார்க்கிறது  என்று அட்னான் கூறினார்.


Pengarang :