ECONOMYEKSKLUSIFMEDIA STATEMENT

ஒற்றுமை அரசு பாகுபாடு காட்டவில்லை- அனைத்து இனங்களையும் சமமாக நடத்துகிறது- அன்வார்

செமினி, ஆக 2 – ஒற்றுமை அரசாங்கம் நாட்டில் எந்த இனத்தையும் ஒருபோதும் ஒதுக்கி வைக்கவில்லை. மாறாக, அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து திட்டங்களும்  கொள்கைகளும் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியவை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

ஒற்றுமை அரசாங்கம் ஒரு சார்புடையது என்று சில தரப்பினரின் கூற்றுக்களை நிராகரித்த அவர்,  ஒற்றுமை அரசாங்கத்தின் உதவிகள் மற்றும் முன்னெடுப்புகளை இனம் அல்லது மத முன்னுரிமை இல்லாமல் சமூகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் உள்ளவர்கள் அனுபவிக்கின்றனர் என்றார்.

அரசாங்கத்திடம் அதிக பணம் இல்லாவிட்டாலும், எந்தவித பிரதிபலனும்  இன்றி மக்களுக்கு சேவை செய்வதில்  அது உறுதியாக உள்ளது என்று பிரதமர் கூறினார்.

அரசாங்கத்திடம் பணம் அதிகம் இல்லை. ஆனால் நாங்கள்  மோசடி செய்யாமல் அல்லது தனிப்பட்ட நலனுக்காக பயன்படுத்தாமல்  இருப்பதால் இறைவன் அருளால் அந்த பணத்தைக் கொண்டு மக்களுக்கு உதவ முடிகிறது.

நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், நீங்கள் ஆதரித்தாலும் ஆதரிக்காவிட்டாலும் ஒற்றுமை அரசாங்கம் இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதரவாக இருக்கும் நிலைப்பாட்டை ஒருபோதும் மாற்றிக்கொள்ளாது என்பதை நான் வலியுறுத்துகிறேன் என்று அவர் தெரிவித்தார்.

 சிலாங்கூர் மாநிலத் தேர்தலை முன்னிட்டு செமினியில் நேற்றிரவு  நடைபெற்ற ஒற்றுமை பிரசாரப் பயணத் தொடரில் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

நாட்டில் அனைத்து இன மக்களுக்காகவும் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்களில் வறுமையை, குறிப்பாக பரம ஏழ்மையை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கையும் அடங்கும் என்று பிரதமர் கூறினார்.


Pengarang :