ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பொருளாதார மீட்சியை விட ஆட்சி மாற்றத்தில்தான் பெரிக்கத்தானுக்கு அதிக ஆர்வம்- மந்திரி புசார் சாடல்

கோம்பாக், ஆக 9- விரைவில் நடைபெறவிருக்கும் ஆறு மாநிலத் தேர்தல்களில் வெற்றி பெறும் பட்சத்தில் பொருளாதாரத்தை மீட்சியுறச் செய்வதை விட மத்திய அரசை மாற்றுவதில்தான் பெரிக்கத்தான் நேஷனல் அதிக ஆர்வம் காட்டுகிறது.

இதற்கு மாறாக, பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சனைகளிலிருந்து நாட்டை மீட்பதில்தான் தீவிர கவனம் செலுத்தி வருகிறது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

நமது எதிராளியான பெரிக்கத்தான் நேஷனல் நாட்டைக் காப்பதற்கோ பொருளாதாரத்தை மீட்பதற்கோ அல்லது பெருந்தொற்றுக்குப் பின்னர் மாநிலத்தின் நிலையை உயர்த்துவதற்கோ ஆர்வம் காட்டவில்லை. சிலாங்கூரை வென்றால் மத்தியில் ஆட்சியை வீழ்த்தி விடலாம் என்ற எண்ணத்தில்தான் அவர்கள் இருக்கின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய தலையாயப் பிரச்சனை பொருளாரத்தை மீட்பதுதான். இந்நோக்கத்தை அடைய மக்கள் நம்முடன் உறுதுணையாக இருக்க வேண்டும். பிரதமரை மாற்றுவதோ அரசாங்கத்தை மாற்றுவதோ தற்போதைய தேவை அல்ல என்றார் அவர்.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிக பங்களிப்பை வழங்கி வரும் மாநிலம் என்ற முறையில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்சியுறச் செய்வதில் சிலாங்கூர் முக்கியப் பங்கினை வழங்கி வருகிறது என்றும் அவர் சொன்னார்.

வரும் தேர்தலில் ஆறு மாநிலங்களிலும் பெரிக்கத்தான் நேஷனல் வென்றால் மத்தியில் ஆட்சி மாற்றம் நிகழும் என்று பாஸ் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் முன்னதாக கூறியிருந்தார்.


Pengarang :