ELMEDIA STATEMENT

சிலாங்கூரில் தேர்தலுக்குப் பயன்படுத்தப்படும் 997 கட்டிடங்கள் மீது தீயணைப்புத் துறை சோதனை

கோலாலம்பூர், ஆக 9- சிலாங்கூரில் தேர்தலின் போது பயன்படுத்தப் படவுள்ள 997 கட்டிடங்கள் மற்றும் வளாகங்கள் பாதுகாப்பாகவும் நல்ல நிலையிலும் இருப்பதை உறுதி செய்ய சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அவ்விடங்களில் தொடர்ச்சியாக சோதனை மேற்கொண்டு வருகிறது.

வேட்பு மனுத்தாக்கல் தினமான ஜூலை 29 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த சோதனை நடவடிக்கை மாநில மந்திரி  புசார் நியமிக்கப் பட்டு அரசாங்கம் அமைக்கப்படும் வரை தொடரும் என்று சிலாங்கூர் மாநில தீயணைப்புத் துறையின் இயக்குநர் வான் முகமது ரசாலி வான் இஸ்மாயில் கூறினார்.

இக்காலக்கட்டத்தில் எந்த ஒரு விரும்பத்தகாத சம்பவத்தையும் எதிர் கொள்வதற்கு ஏதுவாக அனைத்து தீயணைப்பு நிலையங்களும் உயர்ந்தபட்ச தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

நாங்கள் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் ஆய்வை மேற்கொள்ளும் அதேவேளையில் தீ சம்பவத்திற்கு முந்தைய நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். தீ பாதுகாப்பு முன்னேற்பாடுகள் முழு தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்வதற்கு கூடுதல் நடவடிக்கைகளையும் எடுக்க விருக்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

வாக்களிப்பு மையங்கள் பெரும்பாலும் பள்ளிகளில் செயல்படும் நிலையில் சம்பந்தப்பட்ட இடங்களில் தீயைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனங்கள் எளிதாக நுழைவதற்கு ஏதுவாக அங்குள்ள வழித்தடங்களில் தடைகள் ஏற்படுத்த படாமல் இருப்பதையும் உறுதி செய்வோம் என்றார் அவர்.

பண்டான் இண்டா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற சிலாங்கூர் மாநில  நிலையிலான தீயணைப்புத் துறையின் மாதாந்திர ஒன்று கூடும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :