ECONOMYELMEDIA STATEMENT

மடாணி சமூகத் தலைவர்களாக கிறிஸ்டி உட்பட மூவர் நியமனம்

டெங்கில், ஆக 9- பலாக்கோங் சட்டமன்றத் தொகுதி நிலையிலான மடாணி சமூகத் தலைவர்களாக மூவர் நியமனம் பெற்றுள்ளனர். பாங்கி நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற இந்த பலாக்கோங் தொகுதியை பிரதிநிதிக்கும் வாய்ப்பு கிறிஸ்டி லுய்ஸ், அபிக் மற்றும் அனாபெல் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

அண்மையில் டெங்கில், தாமான் டேசா சமூக மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் தொடர்பு மற்றும் இலக்கவியல் துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபாசில் இந்த மடாணி சமூகத் தலைவர்களுக்கான நியமனக் கடிதங்களை அம் மூவரிடமும் வழங்கினார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் ஃபாஹ்மி, பல இன நாடான மலேசியாவில் வாழும்  நாம் அனைவரும் இன, மத பேதங்களைக் கடந்து ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதோடு நம்மிடையே ஒற்றுமையும் ஒருமைப்பாடும் ஓங்கி வளர வேண்டும் என வலியுறுத்தினார்.

சமுதாயம் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபாடு காட்டுவதை நோக்கமாகக் கொண்ட இந்த மடாணி சமூகத் தலைவரின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகளாகும். ஒவ்வொரு மடாணி தலைவரும் செயல் குழுவை அமைத்து பல்வேறு சமூக நலத் திட்டங்களை அமல்படுத்த வேண்டும். திட்டங்களை அமல்படுத்துவதற்கு மத்திய அரசின் சார்பாக நிதியுதவியும் வழங்கப்படும்.

இதனிடையே, தம்மீது நம்பிக்கை வைத்து அப்பொறுப்புக்கு தம்மை நியமித்த பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஷாரெஸான் ஜோஹானுக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக பலாக்கோங் தொகுதிக்கான இந்திய சமூகத் தலைவருமான கிறிஸ்டி குறிப்பிட்டார்.


Pengarang :