ELMEDIA STATEMENTNATIONAL

இன்று தவறாமல் வாக்களிப்போம், சிலாங்கூரில் ஒற்றுமை அரசை உருவாக்குவோம்- மந்திரி புசார் வேண்டுகோள்

கோம்பாக், ஆக 12- பக்கத்தான் ஹராப்பான்-பாரிசான் நேஷனல் கூட்டணியின் வெற்றியை உறுதி செய்ய இன்றைய வாக்களிப்பில் தவறாமல் கலந்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றுமாறு சிலாங்கூர் மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

தேர்தலுக்கு முன்னரும் தேர்தல் பிரசாரத்தின் போதும் அவ்விரு கூட்டணிகளும் ஆற்றிய பணிகளின் அடிப்படையில் மாநிலத்தில் ஒற்றுமை அரசாங்கம் மறுபடியும் அமைக்கப்படும் எனத் தாம் நம்புவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

தேர்தல் பிரசாரம் தொடங்குவதற்கு முன் தொடங்கி தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வரும் இறுதி நொடிகள் வரை நான் நிலைமையை தொடர்ச்சியாகக் கண்காணித்து வருகிறேன். மாநிலத்தில் ஒற்றுமை அரசாங்கம் வலுப்பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

ஆனால், ஒரே ஒரு நிபந்தனை. அனைவரும் இன்று வாக்களிக்கச் செல்ல வேண்டும். பிரசாரக் கூட்டங்களில் மட்டும் கலந்து கொண்டு வாக்களிக்காமல் இருக்க கூடாது என்று அவர் சொன்னார்.

சுங்கை துவா தொகுதி வாக்காளர்கள் தமக்கு மீண்டும் ஒரு முறை வாய்ப்பு வழங்கி கடந்த 2008ஆம் ஆண்டில் தொடங்கிய மேம்பாட்டுப் பணிகள் தொடர்வதற்கு சந்தர்ப்பம் அளிப்பார்கள் எனத் தாம் நம்புவதாகவும்  அவர் குறிப்பிட்டார்.

மக்கள் நலன் சார்ந்த திட்டங்களைத் தொடரும் அதேவேளையில் கால்பந்து திடலைச் சீரமைப்பது, தாமான் பத்து கேவ்சில் மினி ஸ்டேடியம் அமைப்பது உள்ளிட்ட அடிப்படை வசதி திட்டங்களையும் தாம் அமல்படுத்த உள்ளது அவர் சொன்னார்.


Pengarang :