ECONOMYMEDIA STATEMENTNATIONAL

விமான விபத்து தொடர்பான படங்கள், காணொளிகளை பகிர்வோர் மீது சட்ட நடவடிக்கை- எம்.சி.எம்.சி எச்சரிக்கை

புத்ரா ஜெயா, ஆக 18- ஷா ஆலம், பண்டார் எல்மினா அருகே கத்ரி நெடுஞ்சாலையில் நேற்று நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் படங்கள் அல்லது காணொளிகளை பகிர்வோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்று தொடர்பு மற்றும் பல்லுடக ஆணையம் (எம்.சி.எம்.சி.) எச்சரித்துள்ளது.

விமான விபத்து தொடர்பான காட்சிகளைப் பகிர்வோர் மீது 1998ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லுடகச் சட்டத்தின் 233வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்று அந்த ஆணையம் அறிக்கை ஒன்றில் கூறியது.

விபத்தில் உயிரிழந்தவர்களின் படங்கள் அல்லது காணொளியைப் பகிர்வது விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரின் மனதை நோகடிக்கும் என்பதோடு  மனுக்குலத்தின் அடிப்படை பண்பு நெறிகளை மீறியச் செயலாகவும் அமையும் என்று அந்த ஆணையம் குறிப்பிட்டது.

இச்சம்பவத்தின் தாக்கம் மற்றும் உணர்வுகளைப் புரிந்து பாதிக்கப்பட்டவர்களின் படங்களை பகிர்வதை அனைத்துத் தரப்பினரும் தவிர்க்க வேண்டும் என அது கேட்டுக் கொண்டது.

இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தங்களின் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாக கூறிய அந்த ஆணையம், அந்த பேரிடரில் உயிரிழந்தவர்களின் படங்களை பகிர்வதை உடனடியாக நிறுத்தும்  அதே வேளையில் அவற்றை நீக்கி விடும்படியும் சம்பந்தப்பட்டத் தரப்பினரைக் கேட்டுக் கொண்டது.

நேற்று மதியம் நிகழ்ந்த பீச்கிராஃப்ட் 390(பிரீமியர் 1) ரக விமான விபத்தில் பகாங் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ ஜோஹாரி ஹருண் உள்பட பத்து பேர் உயிரிழந்தனர்.


Pengarang :