MEDIA STATEMENTNATIONALPBT

சுதந்திர மாதத்தை குதூகலமாக்க எம்.பி.பி.ஜே. ஏற்பாட்டில் 10,000 தேசியக் கொடிகள் விநியோகம்

பெட்டாலிங் ஜெயா, ஆக 19- பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் தனது அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக வளாகங்களுக்கு 10,000க்கும் மேற்பட்ட தேசியக் கொடிகளை விநியோகிக்கிறது.

நாட்டின் 66 தேசிய தினக் கொண்டாட்டத்திற்கு மெருகுகூட்டும் நோக்கிலான இந்த கொடி வழங்கும் திட்டம் இரு வாரங்களுக்கு முன்னரே தொடங்கப்பட்டு விட்டதாக டத்தோ பண்டார் முகமது அஸ்ஹான் முகமது அமிர் கூறினார்.

இதுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தேசியக் கொடிகள் மாநகர் மன்றத்தின் லைசென்ஸ் பெற்ற வணிக வளாகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

கடைகளில் வரிசையாக அணிவகுத்து பட்டொளி வீசிப் பறக்கும்  தேசியக் கொடிகளால் இந்த சுதந்திர மாதம் முழுவதும் பெட்டாலிங் ஜெயா வண்ணமயாக ஜொலிக்க வேண்டும் என்பதே எங்களின் விருப்பமாகும். 

நாம் நேசிக்கும் நாட்டின் மீது நாம் காட்டும் அன்பை பிரதிபலிக்கும் விதமாகவும் இந்த கொடி வழங்கும் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

அதோடு மட்டுமின்றி தேசிய தினத்தை குதூகலமாக்கவும் தாய் நாட்டின் மீதான பற்றுதலை மக்கள் மத்தியில் விதைக்கவும் மாநகர் மன்றம் 40 அடி அகலம் மற்றும் 160 அடி நீளம் கொண்ட இரு ராட்சத கொடிகளை மெனாரா எம்.பி.பி.ஜே. தலைமையகத்தில் பறக்கவிடும் என்றும் அவர் சொன்னார்.

 


Pengarang :