ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மலேசியாவில் தமிழ்ப் பள்ளிகளால் தமிழ் வாழ்ந்து கொண்டிருக்கிறது- அமைச்சர் வ. சிவகுமார் பெருமிதம்

கோலாலம்பூர் ஆக 19- 11 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கடந்த ஜூலை மாதம் 21  ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை மலாயா பல்கலைக்கழகத்தில் வேந்தர் அரங்கில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

இந்த உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை மலேசிய ஏற்று நடத்தியது  இது 4 ஆவது முறையாகும். உலகத் தமிழாராய்ச்சி

நிறுவனம்,இந்திய ஆய்வுத் துறை,  ஓம்ஸ் அறக்கட்டளை மற்றும் தமிழ் பண்பாட்டு இயக்கம் ஆகியவற்றால் இந்த மாநாடு சீரும் சிறப்புடன் நடைபெற்றது.

உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டனர். மலேசியா, இந்தியா, இலங்கை, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, லண்டன், ஜப்பான், சீனா, ஹாங்காங் மற்றும் பல. நாடுகளில் இருந்து பேராளர்கள் கலந்து கொண்டு ஆதரவு வழங்கியது பாராட்டுக்குரியது.

இந்த 3 நாள் மாநாட்டில் 700 வெளிநாட்டு பிரதிநிதிகள், 500 மலேசிய பிரதிநிதிகள்  மற்றும் 2,000  பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அறிஞர்கள் 501 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தனர்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்கள் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து முழு ஆதரவு வழங்கினார். இந்த வேளையில் அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மாநாட்டில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 50 லட்சம் வெள்ளி மானியத்தை அறிவித்தார். அடுத்த தலைமுறைக்கு தமிழ் மொழியை  கொண்டு செல்லும் வகையில் இந்த மாநாடு இனிதே நடைபெற்று முடிந்தது.

இந்த வேளையில் மாநாடு சிறப்பாக நடைபெற முழு ஆதரவு வழங்கிய செந்தமிழ் செல்வர் ஐயா ஓம்ஸ் பா தியாகராஜன் மற்றும் அவர்தம் குழுவினரை பெரிதும் பாராட்டுகிறேன். காலத்தால் என்றென்றும் அழியாத செழுமை வாய்ந்த மொழிதான் தமிழ் மொழியாகும்.

நாட்டில் உள்ள 528 தமிழ்ப் பள்ளிகளில் தமிழ் வாழ்ந்து கொண்டிருக்கிறது .இந்த தமிழ் மொழியை நாமும் தொடர்ந்து கட்டிக் காப்போம் என்றார் அவர். 11 ஆவது உலகத்  தமிழாராய்ச்சி மாநாடு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்ததை முன்னிட்டு கோலாலம்பூர் லேக் கிளப்பில் நடைபெற்ற நன்றி நவிலும் விருந்தோம்பல் விழாவுக்கு தலைமையேற்று உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :