ECONOMYMEDIA STATEMENT

சனிக்கிழமை நடைபெறும் ஜெலாஜா ஜோப்கேர் கண்காட்சியில் 10,000 வேலை வாய்ப்புகள்

ஷா ஆலம், ஆக 23- சிலாங்கூர் தொழிலாளர் திறன் மேம்பாட்டுப் பிரிவின்
(யு.பி.பி.எஸ்.) ஏற்பாட்டில் இரண்டாம் கட்ட ஜெலாஜா ஜோப்கேர் வேலை
வாய்ப்பு கண்காட்சி வரும் ஆகஸ்டு 26ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா
மெனாரா யாயாசான் சிலாங்கூரில் நடைபெறவுள்ளது.
காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவிருக்கும்
இந்த வேலை வாய்ப்புக் கண்காட்சியில் சேவை, உற்பத்தி மற்றும் சரக்கு
போக்குவரத்து துறைகளில் 10,000 வேலை வாய்ப்புகள் வழங்கப்படுவதாக
அந்த பிரிவின் ஒருங்கிணைப்பாளர் விஜயன் சுப்பிரமணியம் கூறினார்.
இந்த வேலை வாய்ப்பு கண்காட்சியில் மாற்றுத் திறனாளிகள் உள்பட
பல்வேறு வயதுடையவர்களும் பங்கேற்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
நேர்முகப் பேட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் சீரான உடையணிந்து
சுய விபரக் குறிப்புடன் வரும்படி கேட்டுக் கொள்கிறோம் என்று அவர்
சொன்னார்.
இந்த வேலை வாய்ப்புக் கண்காட்சியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 20
முதலாளிகள் கலந்து கொண்டு தகுதியான பணியாளர்களை நேர்காணல்
மூலம் தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபடுவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, அன்றைய தினம் பாதுகாப்பான முறையில் மோட்டார்
சைக்கிள் ஓட்டுவது தொடர்பான பயிற்சியை பெட்டாலிங் ஜெயா, சேஃப்டி
டிரைவிங் சென்டரில் தாங்கள் நடத்தவுள்ளதாகவும் விஜயன் கூறினார்.
பாதுகாப்பான முறையில் சாலையைப் பயன்படுத்துவது தொடர்பான
விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலான இந்த பயிற்சியில் உணவு
மற்றும் பொருள் விநியோகத் தொழிலில் ஈடுபட்டுள்ள 100 பேர் பங்கு
கொள்வர் என அவர் தெரிவித்தார்.
இந்த பயிற்சியின் மூலம் பாதுகாப்பான முறையில் சாலையைப்
பயன்படுத்துவதற்குரிய விழிப்புணர்வை மோட்டார் சைக்கிளோட்டிகள்
மத்தியில் ஏற்படுத்தவும் அதன் வாயிலாக சாலை விபத்துகளின்
எண்ணிக்கையைக் குறைக்கவும் இயலும் என நாங்கள் நம்புகிறோம்
என்றார் அவர்.

Pengarang :