ECONOMYMEDIA STATEMENTNATIONAL

எம்40 தரப்பினரை அரசாங்கம் ஒருபோதும் கைவிட்டதில்லை- பிரதமர் கூறுகிறார்

கோலாலம்பூர், ஆக 23- நடுத்தர வருமானம் பெறும் எம் 40 தரப்பினரின் நலனை அரசாங்கம் ஒருபோதும் புறக்கணித்ததில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

குறைந்த வருமானம் பெறும் பி 40 தரப்பினரின் நலனில் அரசாங்கம் அதிக அக்கறை காட்டி வரும் காரணத்தால் நடுத்தர வருமானம் பெறும் எம் 40 தரப்பினரின் நலன் புறக்கணிக்கப்படுவதாக சில தரப்பினர் கூறுவதில் உண்மை இல்லை என்றும் அவர் சொன்னார்.

நாங்கள் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறோம். இருந்த போதிலும் பி40 தரப்பினரின் நலனில் மட்டுமே அதிக அக்கறை காட்டுகிறோம் என்ற அனுமானம் சரியானதல்ல. எம்.ஆர்.எஸ்.எம். எனப்படும் மாரா இளநிலை அறிவியல் பள்ளிகள் உள்பட மலாய் கல்விக் கழகங்களை இதற்கு உதாரணம் கூறலாம். இங்கு பயிலும் பரம ஏழைக மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஒன்று அல்லது இரண்டு விழுக்காடு கூட இருக்காது என்றார் அவர்.

இதன் காரணமாகத்தான் திட்டமிடப்பட்ட அனைத்து சிறப்பு பள்ளிகளிலும் மிகவும் வறிய நிலையிலுள்ள தரப்பினருக்கு ஒன்று முதல் ஐந்து விழுக்காட்டு இடங்கள் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என கல்வியமைச்சரிடம் நான் அண்மையில் பரிந்துரைத்துள்ளேன்.. இவ்வாறு செய்யாவிட்டால் இந்த அதிருப்தி போக்கு தொடர்ந்து நிலவிக் கொண்டுதான் இருக்கும் என்று அன்வார் சொன்னார்.

இதனிடையே, கல்வியில் தகுதி அடிப்படையிலான தேர்வு  குறித்து கருத்துரைத்த பிரதமர், இந்த முறை முக்கியமானது என்ற போதிலும் மேலாண்மை மற்றும் நாட்டின் நிர்வாக முறை நியாயமாக நடப்பதை உறுதி செய்வதற்கான ஒரே தகுதியாக இதனை கருத முடியாது என்றார்.

தகுதி அடிப்படையிலான தேர்வு குறித்து பேசினால், கோலாலம்பூரிலுள்ள சிறப்பு பள்ளியுடன் சரவா, காப்பிட்டில் உள்ள பள்ளியுடன் செய்யப்படும் ஒப்பீடு நியாயமற்றதாக இருக்கும் என்றார் அவர்.


Pengarang :