ECONOMYMEDIA STATEMENT

பங்சாபுரி ஜெயாவிலுள்ள ஃபுட்சால் மைதானத்தைச் சீரமைக்க ஸ்ரீ செத்தியா உறுப்பினர் நடவடிக்கை

ஷா ஆலம், ஆக 23- இங்குள்ள டி.டி.டி.ஐ. ஜெயா பங்சாபுரி ஜெயாவிலுள்ள உள்ள ஃபுட்சால் விளையாட்டு மைதானத்தை சீரமைப்பதற்கான நடவடிக்கைகளை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முன்னெடுத்துள்ளார்.

மிகவும் மோசமான நிலையிலுள்ள அந்த மைதானத்தை சீரமைப்பது தொடர்பான பரிந்துரையைத் தாம் ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் கவனத்திற்கு கொண்டுச் செல்லவுள்ளதாக டாக்டர் முகமது ஃபாஹ்மி ஙா கூறினார்.

அந்த விளையாட்டு மைதானத்தின் மோசமான நிலை குறித்து எனக்குத் தெரிவிக்கப்பட்டது. நிலைமையை நேரில் கண்டறிவதற்காக ஸ்ரீ செத்தியா தொகுதி சேவை மையப் பிரதிநிதிகளும் சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேரில் வருகை மேற்கொண்டனர்.

 ரப்பர் விரிப்புகள் பெயர்ந்த நிலையில் காணப்படும் அந்த மைதானத்தின் தரையைச் சீரமைக்கவும் திடலைச் சுற்றிலும் நடைப்பயிற்சிக்கான தடத்தை அமைக்கவும் வட்டார மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்று அவர் சிலாங்கூர் கினியிடம் தெரிவித்தார்.

பொது மக்களின் வசதிக்காக அந்த விளையாட்டு மைதானத்தில்  அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு தேவையான நிதியை மாநகர் மன்றம் ஒதுக்கீடு செய்யும் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :