ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கல்வித் துறையை மேம்படுத்த எம்.பி.ஐ. 1 கோடி வெள்ளி ஒதுக்கீடு

ஷா ஆலம், ஆக 23- மாநிலத்தில் கல்வித் துறையை தரம் உயர்த்துவதற்காக எம்.பி.ஐ. எனப்படும் சிலாங்கூர் மந்திரி புசார் கழகம் ஒரு கோடி வெள்ளிக்கும் மேல் ஒதுக்கீடு செய்துள்ளது.

டியூஷன் ராக்யாட் சிலாங்கூர் (பி.டி.ஆர்.எஸ்.) திட்டம், மீண்டும் பள்ளிக்குச் செல்வோம் திட்டம் மற்றும் பள்ளிச் சீரமைப்பு உள்ளிட்ட திட்டங்களை இது உள்ளடக்கியுள்ளதாக எம்.பி.ஐ. நிறுவன சமூக கடப்பாட்டு பிரிவுத் தலைவர் அகமது அஸ்ரி ஜைனால் நோர் கூறினார்.

பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகப் பணிகளுக்காக மாநிலத்திலுள்ள 930 ஆரம்ப மற்றும் இடைநிலைப்பள்ளிகளுக்கு தலா 1,000 வெள்ளி இவ்வாண்டில் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பெற்றோர் ஆசிரியர் சங்கங்களின் பணிகள் சீராக நடைபெறுவதற்கு இந்த நிதி துணை புரிந்தது. இந்த நிதியைக் கொண்டு கூட்டங்களை நடத்துவது மற்றும்  இதரப் பணிகளை கவனிப்பதற்குரிய வாய்ப்பு அச்சங்கங்களுக்கு ஏற்பட்டது என்றார் அவர்.

மாநில அரசின் துணை நிறுவனமான எம்.பி.ஐ. கல்வித் திட்டங்களை அமல்படுத்துவதற்காக கடந்த 2021ஆம் ஆண்டு முதல் 2 கோடியே 55 லட்சம் வெள்ளி வெள்ளி வழங்கியுள்ளதாக  மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த ஜூன் மாதம் கூறியிருந்தார்.


Pengarang :