ECONOMYMEDIA STATEMENTNATIONAL

அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டமாக பெட்டாலிங் விளங்குகிறது- மலேசிய புள்ளி விபரத் துறை தகவல்

புத்ராஜெயா, ஆக 30- இருபத்து மூன்று லட்சம் குடியிருப்பாளர்களுடன் 2023ஆம் ஆண்டில் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டமாக சிலாங்கூர் மாநிலத்தின் பெட்டாலிங் மாவட்டம் விளங்குகிறது.

மலேசிய புள்ளி விபரத் துறை நேற்று வெளியிட்ட நிர்வாக மாவட்டங்களில் நடப்பு மக்கள் தொகை மதிப்பீடு தொடர்பான தரவுகளில் இந்த எண்ணிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.

பெட்டாலிங் மாவட்டத்தை அடுத்து ஜோகூர் மாநிலத்தின் ஜோகூர் பாரு மாவட்டம் 18 லட்சம் குடியிருப்பாளர்களுடன் இரண்டாவது இடத்திலும் சிலாங்கூரின் உலு லங்காட் மாவட்டம் 15 லட்சம் பேருடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

மக்கள் தொகை எண்ணிக்கையில் மட்டுமின்றி அடர்த்தியிலும் பெட்டாலிங் மாவட்டமே முதலிடம் வகிக்கிறது. இம்மாவட்டத்தில் ஒரு சதுர கிலோ மீட்டர் பகுதியில் 4,783 பேர் வசிக்கின்றனர். அதற்கு அடுத்த நிலையில் பினாங்கு மாநிலத்தின்  தீமோர் லாவுட் பகுதி உள்ளது. இங்கு ஒரு சதுர கிலோ மீட்டரில் 4,710 பேரும் மூன்றாவது இடத்தில் உள்ள பினாங்கின் செபராங் பிறை தெங்காவில் ஒரு சதுர கிலோ மீட்டரில் 1,845 பேரும் வசிக்கின்றனர்.

நாட்டின் எட்டு மாவட்டங்கள் வயது முதிர்ந்த பிரிவில் இடம் பெற்றுள்ளன. ஜோகூர் பாரு, கோத்தா பாரு, கோல கிராய், செபராங் பிறை உத்தாரா, பாராட் டாயா, கோத்த கினபாலு, மிரி மற்றும் உலு சிலாங்கூர் ஆகிய மாவட்டங்களில் வசிப்போரில் ஏழு விழுக்காட்டிற்கும் மேற்பட்டோர் 65 வயதுக்கும் அதிகமானவர்களாவர்.


Pengarang :