MEDIA STATEMENTSELANGOR

ஆட்சியாளர்களை அவமதித்த புகார் தொடர்பில்  மகாதீரிடம் போலீஸ் வாக்குமூலம் பதிவு

கோலாலம்பூர், ஆக  30 –  அரச அமைப்புக்கு எதிராக அவதூறான கருத்துகளை வெளியிட்டது தொடர்பில் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

டாக்டர் மகாதீர் தவிர்த்து, பெஜூவாங் கட்சியின் கூட்டரசு பிரதேச முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ கைருடின் அபு ஹசான் மற்றும் பெஜூவாங் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் டத்தோ மர்ஜூக்கி யாஹ்யா ஆகியோரிடமும் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டதாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது சுஹைலி ஜைன் கூறினார்.

இந்த விவகாரம் இன்னும் விசாரணை நிலையில் இருந்து வருவதாக கூறிய அவர், விசாரணைக்கு இடையூறு ஏற்படும் வகையில் இது குறித்த தவறான தகவல்களைப் பகிர வேண்டாம் என பொது மக்களைக்  தாங்கள் கேட்டுக் கொள்வதாகச்  சொன்னார்.

இந்த புகார் தொடர்பில் வகைப்படுத்தப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு, புக்கிட் அமான்  குற்றப் புலனாய்வுத்  துறையின் டி5 பிரிவு ஆகியவை விசாரணை மேற்கொண்டு வருவதாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இதனிடையே, சிலாங்கூர் சுல்தானை அவமதிக்கும் வகையில் நேற்று கருத்துகளை வெளியிட்ட இமாம் முஸ்தாகிம் என்ற பேஸ்புக் கணக்கு உரிமையாளருக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதையும் முகமது சுஹைலி உறுதிப்படுத்தினார்.

சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்களை நிந்திக்கும் மற்றும் அவருக்கு எதிராக விசுவாசமற்ற  போக்கை அந்நபர் கொண்டிருந்தது அவரின் பேஸ்புக் பதிவுகளின் வழி  தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


Pengarang :