MEDIA STATEMENTNATIONALPBT

ஏழு மாதங்களில் 6.5 கோடி வெள்ளி மதிப்பீட்டு வரி வசூல்- செலாயாங் நகராண்மைக் கழகம் தகவல்

செலாயாங், ஆக 31 இவ்வாண்டின் முதல் ஏழு மாதங்களில் 6 கோடியே 53 லட்சத்து 10 வெள்ளி மதிப்பீட்டு வரியை செலாயாங் நகராண்மைக் கழகம் வசூலித்துள்ளது.

இவ்வாண்டில் செலாயாங் நகராண்மைக் கழகம் வசூலிக்க வேண்டிய 11 கோடியே 40 லட்சம் வெள்ளி மதிப்பீட்டு வரியில் இது 57.29 விழுக்காடாகும் என்று நகராண்மைக் கழகத் தலைவர் டத்தோ முகமது யாஸிட் கைரி கூறினார்.

இவ்வாண்டில் இதுவரை 85 லட்சத்து 90 ஆயிரம் வெள்ளி வரி பாக்கியை நகராண்மைக் கழகம் வசூலித்துள்ளது. இவ்வாண்டில் வசூலிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள 1 கோடியே 12 லட்சம் வெள்ளியில் இது 71.55 விழுக்காடாகும் என்று அவர் சொன்னார்.

இவ்வாண்டு இரண்டாம் தவணைக்கான மதிப்பீட்டு வரி வசூலிப்பு தொடர்பில் 67,059 பில்கள் வரி செலுத்துவோருக்கு மின்னஞ்சல் வாயிலாக அனுப்பப்பட்ட வேளையில் மேலும் 36,753 பேருக்கு எஸ்.எம்.எஸ். எனப்படும் குறுந்தகவல் மூலம் அனுப்பப்பட்டது என அவர் தெரிவித்தார்.

இவ்வாண்டு ஜூலை மாதம் ஒன்றாம் தேதி தொடங்கி இதுவரை வரி செலுத்தத் தவறிய காரணத்திற்காக 1,534 பேரின் சொத்துகள் முடக்கப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாண்டு ஜூலை மாதம் வரை மை எம்பிஎஸ் அகப்பக்கம் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட 953 பரிவர்த்தனைகளின் மூலம் வணிகர்களிடமிருந்து 357,748 வெள்ளி வரியை நாங்கள் வசூலித்துள்ளோம் என அவர் மேலும் கூறினார்.


Pengarang :