ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நாட்டு மக்களின் நல்லிணக்கம், சுபிட்சத்திற்கு ஒற்றுமையே திறவுகோள்- மாமன்னரின் தேசிய தின வாழ்த்து

கோலாலம்பூர், ஆக 31- நாடு மற்றும் மக்களின் நல்லிணக்கம் மற்றும் சுபிட்சத்திற்கு பல்லின மக்களுக்கிடையிலான ஒற்றுமையே பிரதான திறவுகோள் என்று மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா கூறினார்.

“மலேசியா மடாணி- ஒற்றுமை உறுதிப்பாடு, நம்பிக்கை நிறைந்தது“ என்ற இவ்வாண்டிற்கான தேசிய தினக் கருப் பொருளுக்கேற்ப இது அமைந்துள்ளதாக இஸ்தானா நெகாரா பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவொன்றில் அவர் தெரிவித்தார்.

நாட்டின் வளப்பத்திற்கும் நிலைத்தன்மைக்கும் ஒற்றுமையின் வலிமை முக்கிய திறவுகோளாக விளங்குவதோடு நமக்கு இப்போதும் எதிர்காலத்திலும் எதிர் நோக்கும் சவால்களை சமாளிப்பதற்கான வலுவைத் தரக்கூடிய ஆதாரமாகவும் திகழ்கிறது என்று அவர் சொன்னார்.

நாட்டிற்கு சுதந்திரம் பெறுவதற்கான கனவும் உறுதிப்பாடும் நிஜமாவதற்கு உறுதுணையாக இருந்த நாட்டுப்பற்று மற்றும் நாட்டை நேசிக்கும் உணர்வு நிறைந்த 60 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை நாம் அனைவரும் நினைவுக்கூற  வேண்டும் என்றும் அவர் நாட்டு மக்களை கேட்டுக் கொண்டார்.

நாட்டு மக்களிடையே ஒற்றுமையை விதைப்பதற்கு பாடுபட்ட தலைவர்கள் போராளிகள் மற்றும் நாட்டுப் பற்றாளர்கள் ஆகியோரையும் நாட்டின் இறையாண்மையைக் கட்டிக் காப்பதற்கு பாதுகாப்பு படையினர் புரிந்த தியாகங்களையும் மக்கள் அனைவரும் போற்றிக் காக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆகவே, இதுநாள் வரை நிலவி  வரும் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை தொடர்ந்து கட்டிக்காப்பதோடு அல்லாமல் அதனை மேலும் வலுப்பெறச் செய்யும் கடப்பாடும் தலைவர்களுக்கும் மக்ளுக்கும் உள்ளது என்றும் அவர் சொன்னார்.


Pengarang :