ECONOMYMEDIA STATEMENTNATIONAL

எஹ்சான் மடாணி திட்டத்தின் கீழ் 170 கைதிகள் விடுவிப்பு

கோலாலம்பூர், ஆக 31- நாட்டின் 66வது தேசிய தின கொண்டாட்டத்தையொட்டி எஹ்சான் மடாணி உரிமம் பெற்ற கைதிகள் விடுதலை (பி.பி.எஸ்.எல்.) திட்டத்தின் கீழ் ஐந்து மாநிலங்களில் மொத்தம் 170 கைதிகள் நேற்று விடுவிக்கப்பட்டனர்.

விடுவிக்கப்பட்ட கைதிகள் அனைவரும் மலாக்கா, பேராக், பகாங், பினாங்கு மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய ஐந்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களாவர்.

மலாக்காவில், பி பி.எஸ் எல். எஹ்சான் மடாணி திட்டத்தின் கீழ் மொத்தம் 36 கைதிகள் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டனர். அவர்களில் 21 பேர் முதலாளிகளால் உடனடியாக பணியமர்த்தப்பட்டனர். ஆறு கைதிகள் அவர்களின்  குடும்பத்தினரால் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.  ஒன்பது பேர் முன்னாள் கைதிகளுக்கான புனர்வாழ்வு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட கைதிகள் அனைவரும் போதைப்பொருள் கடத்தல் அல்லது துஷ்பிரயோகம் அல்லது போதைப் பழக்கத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கும் குறைவான சிறை தண்டனை பெற்றவர்களாவர் என்று மலாக்கா, சுங்கை ஊடாங் சிறைச்சாலை துணை இயக்குநர் மூத்த உதவி ஆணையர் முகமட் ஹஃபிசி யஹாயா தெரிவித்தார்.

கடந்த  ஜனவரி 1ஆம் தேதி முதல் நேற்று வரை இதே திட்டத்தின் கீழ் மொத்தம் 282 கைதிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதாகவும் அவர்களில் 91 பேர் ‘கார்ப்பரேட் ஸ்மார்ட் இன்டர்ன்ஷிப்’ (சி.எஸ்.ஐ.) திட்டத்தின் கீழ் தொழில் துறையில் பணிபுரிந்து வருவதாகவும் அவர் கூறினார்.

சமூகத்தில் புனர்வாழ்வுக்கு ஆக்கத் திறனளிப்பது  மலேசிய சிறைத்துறையின் கடப்பாடுகளில் ஒன்றாகும். கைதிகளை சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைப்பது மற்றும் சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலை குறைப்பதற்கான நடவடிக்கையாகவும் இது விளங்குகிறது என்று அவர் தெரிவித்தார்.

ஆரம்ப கட்டத்தில், ஒரு வருடம் மற்றும் அதற்கும் குறைவான தண்டனை அனுபவிக்கும் கைதிகளுக்காக இந்த
பி.பி.எஸ்.எல். திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால், கடந்த ஜூலை மாதம் தொடங்கி மூன்று ஆண்டுகள் மற்றும் அதற்கும் குறைவான தண்டனை அனுபவிக்கும் சிறைக் கைதிகளுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

 

 


Pengarang :