EKSKLUSIFMEDIA STATEMENTNATIONAL

நாட்டில் பத்திரிகைச் சுதந்திரம் முந்தைய அரசை விட சிறப்பாக உள்ளது-அமைச்சர் உத்தரவாதம்

கோலாலம்பூர், செப் 4- ஊடகங்களுக்கு எதிராக அரசாங்கம் ஒருபோதும் அடக்கு முறையைக் கடைபிடிக்காது என்று தகவல் தொடர்பு மற்றும் இலக்கவியல் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் உத்தரவாதம் அளித்துள்ளார்.

செய்திகளை வெளியிடுவதில் ஊடகங்களுக்கு உள்ள உரிமையைத் தற்காக்க வேண்டும் என்ற கோட்பாட்டில் அரசாங்கம் உறுதியாக உள்ளதாக அவர் சொன்னார்.

எனினும், அவதூறான மற்றும் உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிடும் தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் அது தயங்காது என்று அவர் தெரிவித்தார்.

உதாரணத்திற்கு, அண்மையில் நடைபெற்ற மாநிலத் தேர்தலின் போது அரசியல்வாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது. எனினும், அது குறித்து ஆராய்ந்த  போது அச்செய்தி பொய் என்பது தெரிய வந்தது என்று அவர் குறிப்பிட்டார்.

இது போன்ற தவறுகள் நிகழாமலிருப்பதை உறுதி செய்வதற்கு ஊடகவியலாளர்கள் விரிவாக விவாதிக்க வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பாகும். செய்திகளைப் பெறுவதில் காட்டும் முக்கியத்துவத்தை அவை தக்க ஆதாரங்களைக் கொண்டவையா? என்பதை உறுதி செய்வதிலும் காட்ட வேண்டும் என அவர் சொன்னார்.

அரசாங்கம் இரும்புக் கரங்களைக் கொண்டு அடக்கு முறையைக் கடைபிடிக்காது என்பது நான் வழங்கும் உத்தரவாதமாகும். இந்த உத்தரவாதத்தை ஊடகவியலாளர்களுக்கு நான் வழங்குகிறேன் என அவர் தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு ஆதரவாகச் செயல்படாத இணைய ஊடகங்களை முடக்கும் நடவடிக்கையில் அரசாங்கமும் தகவல் தொடர்பு மற்றும் பல்லுடக ஆணையமும் ஈடுபடக்கூடாது என்று “ரிப்போர்ட்டர்ஸ் வித்அவுட் போர்டர்ஸ்“ எனும் அரசு சாரா அமைப்பு விடுத்திருந்த கோரிக்கை தொடர்பில் கருத்துரைத்த போது அமைச்சர் இவ்வாறு சொன்னார்.


Pengarang :