ALAM SEKITAR & CUACAECONOMYEKSKLUSIF

இல்லாத முதலீட்டுத் திட்டத்தை நம்பி காய்கறி தோட்டக்காரர் வெ.100,000 இழந்தார்

குவாந்தான், ஆக செப் 4- குறுகிய காலத்தில் பெரும் லாபத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசை காய்கறி தோட்டக்காரர் ஒருவருக்கு வாழ்நாளில் மறக்க முடியாத அளவுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தித் தந்தது.

இல்லாத முதலீட்டு திட்டத்தை நம்பி 108,344 வெள்ளியை முதலீடு செய்த கேமரன் ஹைலண்ட்சை சேர்ந்த அந்த காய்கறித் தோட்டக்காரர் அனைத்து சேமிப்பு பணத்தையும் அனாமதேய கும்பலிடம் பறிகொடுத்தார்.

கடந்த புதன் கிழமை விசாட் செயலி மூலம் இணைய முதலீட்டுத் திட்டம் ஒன்றில் அந்த 34 வயது நபர் பங்கேற்றதாக பகாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ யாஹ்யா ஓத்மான் கூறினார்.

இந்த திட்டத்தில் பங்கேற்போர் புள்ளிகளைப் பெற்றால் மட்டும் போதும் என்றும் அதிகப் புள்ளிகளைப் பெறுவோருக்கு அதிக லாபம் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் அதிக லாபம் பெறலாம் எனக் கூறப்பட்டதை நம்பி அவ்வாடவர் அதில் முதலீடு செய்துள்ளார் என்று யாஹ்யா தெரிவித்தார்.

சந்தேக நபர் கொடுத்த நான்கு வங்கிக் கணக்குகளில் ஏழு இணைய பரிவர்த்தனைகள் மூலம் அந்த ஆடவர் பணத்தை சேர்த்துள்ளார் என்று அவர் நேற்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

பெரிய தொகையை முதலீடு செய்த போதிலும் தனக்கு உரிய லாபத் தொகை கிடைக்காதததால் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவ்வாடவர் இது குறித்துபோலீசில் புகார் செய்ததாக அவர் மேலும் சொன்னார்.

எளிதாகவும் விரைவாகவும் அதிக அளவிலான லாபத்தை ஈட்டுவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் முதலீட்டுத் திட்டங்களில் பங்கெடுக்க வேண்டாம் என பொது மக்களைக் கேட்டுக் கொண்ட யாஹ்யா, இது போன்ற மோசடிகளில் சிக்குவதைத் தவிர்ப்பதற்கு ஏதுவாக சமூக ஊடகங்கள் வாயிலாக அனுப்பப்படும் வங்கி கணக்குகளின் நம்பகத் தன்மையை நன்கு ஆராயும்படி ஆலோசனை கூறினார்.

 


Pengarang :