ECONOMYMEDIA STATEMENTNATIONAL

அரசு ஊழியர்களின் சம்பளம் மறுஆய்வு – பிரதமர் அறிவிப்பு

ஜோகூர் பாரு, செப் 4- வரும் அக்டோபர் மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள இரண்டாவது மடாணி  வரவு செலவுத் திட்டத்தில் விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் சம்பள வரம்பை மறுஆய்வு செய்ய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

அரசு ஊழியர்களுக்கான சம்பள மற்றும் ஓய்வூதியத் திட்டம் மீதான விரிவான ஆய்வு அடுத்தாண்டுவாக்கில் முற்றுப்பெறும் வரை தற்காலிக நடவடிக்கையாக இந்த மறுஆய்வு மேற்கொள்ளப்படும் என்று அவர் சொன்னார்.

விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான சம்பள முறை கடந்த 10 அல்லது 12 ஆண்டுகளாக மறுஆய்வு செய்யப்படாமலும் உயர்த்தப்படாமலும் இருந்து வருகிறது. விதிமுறைகளின்படி பத்தாண்டுகளுக்கு ஒரு முறை சம்பள முறை மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இங்கு, ஸ்கூடாயில் உள்ள மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அன்வாருடன் சந்திப்பு நிகழ்வில் அவர் இதனைக் கூறினார். இந்த விவகாரத்தை ஆராய்வதற்கு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அன்வார் குறிப்பிட்டார்.

சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு நீடித்த இந்த கலந்துரையாடல் நிகழ்வில் மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் உள்பட 4,000கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 


Pengarang :