ECONOMYMEDIA STATEMENT

வெள்ளத்தில் சிக்கிய சகாக்களை காப்பாற்ற முயன்ற முதியவர் நீரில் மூழ்கி மரணம்

அலோர் காஜா, செப் 4- நீரில் தத்தளித்த இரு சகாக்களை காப்பாற்ற முயன்ற போது வேகமான நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட  முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். இத்துயரச் சம்பவம் கோல சுங்கை பாருவிலுள்ள பந்தாய் செர்மினில் நேற்று மாலை நிகழ்ந்தது.

நீரில் அடித்துச் செல்லப்பட்ட இடத்திலிருந்து சிறிது தொலைவில் ஹவுடி சுஜாய் (வயது 63) என்ற அந்த நபரின் சடலம் நேற்று மாலை 3.00 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டதாக அலோர் காஜா மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் அர்ஷாட் அபு கூறினார்.

பந்தாய் பூலாவ் மஸ்ஜிட் பகுதியில் தன் இரு சகாக்களுடன் அந்த முதியவர் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட நீர் பெருக்கில் அவ்விருவரும் அடித்துச் செல்லப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

தன் சகாக்களை காப்பாற்ற அந்த முதியவர் முயன்றுள்ளார். எனினும், வேகமான நீரோட்டத்தில் அவர் அடித்துச் செல்லப்பட்டார். நீரில் சிக்கிக் கொண்ட இதர இருவரையும் பொது மக்கள் காப்பாற்றினர் என்று அர்ஷாட் நேற்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறினார்.

சிலாங்கூர் மாநிலத்தின் பலாக்கோங்கைச் சேர்ந்த ஹவுடி எழு பேருடன் மீன் பிடிப்பதற்காக பந்தாய் செர்மினுக்கு நேற்று காலை 10.00 மணியளவில் வந்ததாக அவர் சொன்னார்.

கரைக்கு கொண்டு வரப்பட்ட அந்த முதியவரை  போர்ட்டிக்சன் மருத்துவமனயின் சுகாதார அதிகாரிகள் சோதனை செய்த போது அவர் உயிரிழந்து விட்டது உறுதிப்படுத்தப்பட்டது. பரிசோதனைக்காக அவரின் உடல் அலோர் காஜா மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது என்று அர்ஷாட் மேலும் தெரிவித்தார்.


Pengarang :