ECONOMYMEDIA STATEMENTNATIONAL

திவேட் திட்டம்- மாற்றுத் திறனாளிகளுக்கு நிபந்தனைத் தளர்வு- பிரதமர் அறிவிப்பு

  • ஜோகூர் பாரு, செப் 4- திவேட் எனப்படும் தொழில்நுட்ப மற்றும் தொழில் திறன் பயிற்சித் திட்டங்களில் மாற்றுத் திறனாளிகள் எளிதாக பங்கேற்பதற்கு ஏதுவாக அவர்களுக்கு நிபந்தனைத் தளர்வு வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த நிபந்தனைத் தளர்வை அமல்படுத்தும்படி திவேட் மன்றத்தின் தலைவரான துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமது ஜாஹிட் ஹமிடியை தாம் கேட்டுக் கொள்ளவுள்ளதாக அவர் சொன்னார்.

பயிற்சியின் பங்கேற்பாளர்களுக்கு இரு கைகளும் கட்டாயம் இருக்க வேண்டும் என்பது போன்ற கடுமையான நிபந்தனைகள் மாற்றுத் திறனாளிகளுக்கு தற்போது விதிக்கப்படாத போதிலும் அவர்களின் ஆற்றலை அடிப்படையாகக் கொண்டு நாம் மேலும் சில தளர்வுகளை வழங்கவுள்ளோம் என்றார் அவர்.

இங்குள்ள ஸ்கூடாய் மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற அன்வாருடன் சந்திப்பு எனும் நிகழ்வில் கலந்து கொண்டு பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அரசுத் துறைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு விழுக்காட்டு வேலை வாய்ப்பை வழங்குவதற்கு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் திவேட் திட்டத்தில் நுழைய விதிக்கப்படும் நிபந்தனைகளில் அத்தரப்பினருக்கு வழங்கப்படும் தளர்வு குறித்து மாற்றுத் திறனாளியும் அப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவருமான பங்கேற்பாளர் கேள்வியெழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த அன்வார், இந்த விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய இவ்விவகாரத்தை தாம் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுச் செல்லவுள்ளதாக சொன்னார்.

 


Pengarang :