ECONOMYMEDIA STATEMENTNATIONAL

தாய்லாந்து, ஈராக்கிய பிரதமர்களுடன் அன்வார் சந்திப்பு

நியூயார்க், செப் 22- இங்கு நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) 78வது பொதுப் பேரவையின் இடைவேளையில் தாய்லாந்து மற்றும் ஈராக்கிய பிரதமர்களை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சந்தித்தார்.

சொத்துடைமை மேம்பாட்டு தொழிலதிபராக இருந்து கடந்த மாதம் தாய்லாந்து பிரதமராக பதவியேற்ற ஸ்ரேத்தா தாவிஷினுடன் அன்வார் அதிகாரப்பூர்வ சந்திப்பை நடத்துவது இதுவே முதன் முறையாகும்.

சுமார் முப்பது நிமிடங்களுக்கு நீடித்த இந்த சந்திப்பின் போது இரு நாடுகளின் அமைச்சர்களும் உடனிருந்தனர்.

இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தவிர்த்து எல்லை விவகாரம், தென் தாய்லாந்தில் அமைதி முயற்சி மற்றும் இரு தரப்பு நலன் சார்ந்த வட்டார விவகாரங்கள் குறித்து இச்சந்திப்பில் தாங்கள் விவாதித்ததாக பிரதமர் அன்வார் கூறினார்.

ஈராக்கிய பிரதமர் முகமது ஷியா அல்-சுடானியுடன் நடத்தப்பட்ட சந்திப்பின் போது இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகளை கண்டறிவது குறித்து விவாதிக்கப்பட்டன என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த இருபது ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கும் பக்தாத்தில் உள்ள உள்ள தூதரகத்தை மலேசியா மீண்டும் திறக்கவுள்ளத் தகவலையும் தாம் இச்சந்திப்பின் போது வெளியிட்டதாக அவர் சொன்னார்.

மேற்கு ஆசிய நாடுகளைப் பொறுத்த வரை மலேசியாவின் ஆறாவது பெரிய வர்த்தக பங்காளியாகவும் ஏழாவது பெரிய இறக்குமதியாளராகவும் ஈராக் விளங்குகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு 376 கோடி வெள்ளியாக இருந்த இரு நாட்டு வர்த்தகம் கடந்தாண்டு 24.3 விழுக்காடு அதிகரித்து 468 கோடி வெள்ளியாக உயர்வு கண்டது.

இதனிடையே, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பருவநிலைக்கான தூதர் ஜோன் கெர்ரியையும் பிரதமர் அன்வார் சந்தித்தார். இவர் பாராக் ஓபாபமா தலைமையிலான அரசாங்கத்தில் அமெரிக்கா வெளியுறவு அமைச்சராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :