ECONOMYMEDIA STATEMENTNATIONAL

தங்குமிடங்களில் இரகசிய கேமரா? சுற்றுப்பயணிகளின் குற்றச்சாட்டை அமைச்சு கடுமையாக கருதுகிறது

கோலாலம்பூர், செப் 24- சபாவில் ஹோம் ஸ்டேய் எனப்படும் தங்குமிடத்தில் இரகசிய கேமரா பொருத்தப் பட்டிருந்ததாக அதில் தங்கியிருந்த வெளிநாட்டுச் சுற்றுப்பயணி ஒருவர் சுமத்திய குற்றச்சாட்டை சுற்றுலா, கலை, கலாசார அமைச்சு கடுமையாக கருதுகிறது.

சமூக ஊடகங்கம் ஒன்றில் வெளியான  இக்குற்றச்சாட்டு தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி சபா மாநில அரசு, மாநில சுற்றுலா, கலை மற்றும் கலாசார அமைச்சு மற்றும் சம்பந்தப்பட்ட இதரத் துறைகள் பணிக்கப்பட்டுள்ளதாக அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் கூறினார்.

சுற்றுப்பயணியின் அப்புகாரை ஷங்காய் நகரைத் தளமாக கொண்ட சமூக ஊடகம் ஒன்று இம்மாதம் 14ஆம் தேதி வெளியிட்ட வேளையில் உள்நாடு ஊடகங்கள் அதனை மறுவெளியீடு செய்தன.

இத்தகைய கீழ்த்தரமான செயல்கள் சட்டத்திற்கு புறம்பானவை என்பதோடு இதனால் நாட்டின் சுற்றுலாத் துறைக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்பதால் குற்றமிழைத்த தரப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் சொன்னார்.

சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப் பட்டால் அவர்களின் பதிவு மற்றும் கிரேட் மதிப்பெண்கள் ரத்து செய்யப்படும் என்று ஹோம் ஸ்டேய் நடத்துநர்களுக்கு தாங்கள் எச்சரிக்கை விடுக்க விரும்புவதாக அவர் தெரிவித்தார்.   ஹோம் ஸ்டேய் நடத்துநர்கள் அமைச்சில் முறையாக  தங்குமிட பதிவு பெற்று இருக்க வேண்டும்.

ஹோம் ஸ்டேய் தங்கும் விடுதிகளில் வேலை செய்வோர் கட்டொழுங்குடன் நடந்து கொள்வதை உறுதி செய்யும் அதேவேளையில் அவர்களின் பின்னணியையும் நன்கு ஆராயும்படி அத்தகைய விடுதி  நடத்துநர்களுக்கு அவர் ஆலோசனை கூறினார்.


Pengarang :