ECONOMYMEDIA STATEMENTNATIONAL

விரைவு பேருந்தில் சோதனை- எட்டு இந்தியப் பிரஜைகள் உள்பட 12 பேர் கைது

கோத்தா பாரு, செப் 24- விரைவு பேருந்து ஒன்றில் காவல் துறையினர் மேற்கொண்ட சோதனையில் எட்டு இந்தியப் பிரஜைகளும் நான்கு வங்காளதேசிகளும் கைது செய்யப்பட்டனர். 

கடந்த வெள்ளிக்கிழமை பின்னிரவு 1.00 மணியளவில் குவா மூசாங் மாவட்ட போலீஸ் தலைமையகம் எதிராக மேற்கொள்ளப்பட்ட ஒப் சந்தாஸ் நடவடிக்கையில் அவர்கள் கைது  செய்யப்பட்டதாக குவாங் மூசாங் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் சிக் சூன் ஃபுக் கூறினார்.

இந்த சோதனை நடவடிக்கையின் போது போலீசார் கோலாலம்பூரிலிருந்து கோத்தா பாரு நோக்கிச் சென்று கொண்டிருந்த விரைவு பேருந்தை நிறுத்தி பயணிகளின் ஆவணங்களைச் சோதனையிட்டதாக அவர் அறிக்கை  ஒன்றில் தெரிவித்தார்.

அந்த பேருந்தில் இருந்த எட்டு இந்தியப் பிரஜைகளும் நான்கு வங்காளதேசிகளும் அதிகாரிகளிடம் முறையான பயணப் பத்திரங்களைக் காட்டத் தவறியதாக அவர் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு குவாங் மூசாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு எதிராக 1959/63ஆம் ஆண்டு குடிநுழைவுச் சட்டத்தின் 6(1)(சி) பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது  என்றார் அவர்.

செல்லத்தக்க ஆவணங்கள் இன்றி நாட்டில் இருக்கும் அந்நிய நாட்டினர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு காவல் துறையும் குடிநுழைவுத் துறையும் கூட்டாக மேற்கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றார் அவர்.


Pengarang :