ECONOMYMEDIA STATEMENT

மலிவு விலையில் பொருட்கள் வாங்க அதிகாலை 6.30 மணிக்கு பொதுமக்கள் முற்றுகை

அம்பாங், செப் 24- இன்று இங்குள்ள எம்.பி.ஏ.ஜே. ஏயு 2 பல்நோக்கு மண்டபத்தில் இன்று காலை நடைபெற்ற உலுகிளாங் தொகுதி நிலையிலான ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனைக்கு பொதுமக்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்தது.

இந்த விற்பனைக்கான கூப்பன்கள் காலை 8.00 மணிக்கு தான் விநியோகிக்கப்பட்ட நிலையில் மலிவான விலையில் பொருட்கள் வாங்கும் வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதற்காக  அதிகாலை 6.30 மணி முதல் பொது மக்கள் வரிசையில்  காத்திருந்ததாக இந்த விற்பனையின் திட்ட ஒருங்கிணைப்பாளர் முகமது நஸிப் ஜூல்கிப்ளி கூறினார்.

மலிவு விற்பனை காலை 10.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் கூப்பன்களைப் பெற்றப் பின்னரும் சிலர் இரண்டு மணி நேரம் பொறுமையுடன் காத்திருந்து தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் சென்றதாக அவர் சொன்னார்.

தற்போது சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதால் அந்த உணவுப் பொருளுக்கு மலிவு விற்பனையில் அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. முன்பு மலிவு விற்பனைகளுக்கு 200 பாக்கெட் அரிசியைக் கொண்டு வருவோம். இப்போது அந்த எண்ணிக்கையை 300 ஆக உயர்த்தி விட்டோம். அரசியின் விலை தற்போது 13.00 வெள்ளியாக நிர்ணயிக்கப்பட்ட போதிலும் அதன் விலை சந்தையை விட இன்னும் குறைவாகத்தான் உள்ளது என்றார் அவர்.

இதனிடையே, இந்த விற்பனையில் கலந்து கொண்ட அரசாங்க ஊழியரான நோராபிடாதுல் அஸ்னிண்டா டாஹ்லான் (வயது 38) கூறுகையில், விற்கப் படாத பொருள்களை வாங்குவதற்காக விற்பனை முடியும் வரை தாம் காத்திருப்பது வழக்கம் எனக் கூறினார்.

கூப்பனைப் பெறுவதற்கு முன்கூட்டியே வர முடியாத நிலை ஏற்பட்டது. ஆகவே, விற்கப் படாத பொருள்களை வாங்குவதற்காக நான் இந்த விற்பனை முடியும் வரை காத்திருந்தேன் என்றார் அவர்.

நான் நீண்ட நேரம் காத்திருந்தது எந்த வகையிலும் வீண்போகவில்லை. இங்கு வாங்கும் பொருள்கள் மலிவாகவும் தரமானவையாகவும் உள்ளன. அதிகமான மக்கள் பயன் பெறுவதற்கு ஏதுவாக விற்பனைக்கு வைக்கப்பட்ட பொருள்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கிறேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.


Pengarang :