ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூரில் விவசாய கணக்கெடுப்பு- 60,000 பேர் பங்கேற்பர் என எதிர்பார்ப்பு

ஷா ஆலம், செப் 28- அடுத்தாண்டுக்கான விவசாயக் கணக்கெடுப்பை வெற்றிகரமாக்குவதற்கு மலேசிய புள்ளி விபரத் துறைக்கு முழு ஒத்துழைப்பை வழங்குமாறு விவசாயத் தொழில் முனைவோரை மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆகக் கடைசியாக இந்த கணக்கெடுப்பு  மேற்கொள்ளப் பட்ட நிலையில் புதிதாக கணக்கெடுப்புப் பணிகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதாக  விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹாஷிம் கூறினார் .

ஆகக் கடைசியாக  கடந்த 2005ஆம் ஆண்டில் இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.  இது நாட்டின் மூன்றாவது விவசாயக் கணக்கெடுப்பு ஆகும். அதன் பின்னர் நீண்ட காலமாக கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.

எனவே, இந்த  கணக்கெடுப்பை செயல்படுத்துவதன் மூலம்  விவசாயம் தொடர்பானத் தகவல்களைப் புதுப்பிப்பதற்கும் முழுமையான விவசாய விவரங்களைக் கொண்டிருப்பதற்கும்  வாய்ப்பு ஏற்படும் என்று அவர் நேற்று இங்கு  சிலாங்கூர் 2024 விவசாயக்  கணக்கெடுப்பு மீதான பொது தீர்வு அமர்வில் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில விவசாய  மேம்பாட்டுக் கழகத்தின் விஸ்மா பி.கே.பி.எஸ். கட்டிடத்தில் ஏற்பாடு நடைபெற்ற இந்நிகழ்வில்  பல்வேறு விவசாயத் துறைகளைச் சேர்ந்த 41 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மாநில  புள்ளிவிவரத் துறை இயக்குனர் ஹர்தினி யாக்கோப்பும் இதில் கலந்து கொண்டார்.

இந்த விவசாய கணக்கெடுப்பில் சிலாங்கூரில் பல்வேறு விவசாய துறைகளைச் சேர்ந்த 60,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்த பணியில்  200 கணக்கெடுப்பாளர்கள் பங்கேற்பாளர்கள் என்று இஷாம் மேலும் கூறினார்.

இந்த கணக்கெடுப்புப் பணிகள்  அடுத்த ஜூலை மாதம் தொடங்கி  மூன்று மாதங்களில் முற்றுப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். வரும் செப்டம்பர் 2024 இல் இப்பணி நிறைவடையும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.  இந்தப் பணியில் அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பார்கள் என நம்புகிறேன் என்றார் அவர்.


Pengarang :