ECONOMYMEDIA STATEMENT

பழ வியாபாரி படுகொலை தொடர்பாக நான்கு ஆடவர்கள் கைது

கோலாலம்பூர், செப் 28-   தாமான் ஓ.யு.ஜி.யில் உள்ள இரண்டு  மாடி வீட்டின் முன்புறம்  உள் நாட்டைச் சேர்ந்த பழ வியாபாரி ஒருவர்  கடந்த செவ்வாய்கிழமை படுகொலை செய்யப்பட்ட சம்பவம்  தொடர்பான விசாரணையில் உதவுவதற்காக நான்கு வெளி நாட்டவர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

29 முதல் 53 வயதுடைய சந்தேக நபர்கள் அனைவரும் நேற்று பின்னிரவு  2.30 மணி அளவில் சம்பவம்  இடத்தில்

கைது செய்யப்பட்டதாக பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட  போலீஸ் தலைவர் ஏசிபி அமி ஹிசாம் அப்துல் சுக்கோர் தெரிவித்தார்.

இக்கொலை தொடர்பில் சம்பவ இடத்திலுள்ள  வீட்டில் வாடகைக்கு குடியிருந்த நபரிடமிருந்து இரவு 7.40 மணியளவில் தங்களுக்கு தகவல் கிடைத்ததாக அவர் கூறினார்.

சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய காவல்துறை அதிகாரிகள்,  உடல் மற்றும் முகத்தில் பல இடங்களில் கத்திக்குத்து காயங்களுடன் 80 வயது முதியவர் உயிரிழந்ததை கண்டதாக அவர் சொன்னார். கொலைக்கான காரணம் இன்னும் காவல்துறையால் விசாரிக்கப்படுகிறது என்று அவர்  இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

குற்றவியல்  சட்டத்தின் 302 வது பிரிவின் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக சந்தேக நபர்கள் அனைவரும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை ஏழு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர். கொலையில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு நபரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக  எந்தவிதமான ஊகங்களையும் கூற வேண்டாம் என்று பொது மக்களுக்கு அறிவுறுத்திய அமிஹிசாம், இச்சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள்  பிரிக்பீல்ட்ஸ் காவல்துறையின் ஹாட்லைன் எண் 03-2297 9222, கோலாலம்பூர் காவல்துறையின் ஹாட்லைன் எண் 03-21115 9999  வாயிலாக அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தில் தகவல் அனுப்புமாறு கேட்டுக் கொண்டார்.


Pengarang :