ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சுங்கை லங்காட் சுத்திகரிப்பு  நிலையத்தில் அக்டோபர் 10ஆம் தேதி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்

ஷா ஆலம், செப் 28- சுங்கை லங்காட் நீர் சுத்திகரிப்பு மையத்தில் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது.

இந்த சீரமைப்புப் பணிகள் காரணமாக பெட்டாலிங், கோலாலம்பூர், மற்றும் உலு லங்காட்டில் வரும் அக்டோபர் 10ஆம் தேதி காலை 9.00 மணி முதல் அட்டவணையிடப்பட்ட நீர் விநியோகத் தடை ஏற்படும் என்று அந்நிறுவனம் கூறியது.

சீரமைப்பு பணிகள் அன்றைய தினம் இரவு 7.00 மணிக்கு முற்றுப் பெறும் என்றும் நீர்ப் பகிர்வு முறை நிலைப்படுத்தப்பட்டவுடன் பயனீட்டாளர்களுக்கு கட்டங் கட்டமாக நீர் விநியோகிக்கப்படும் என்றும் அது தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

வரும் அக்டோபர் மாதம் 12ஆம் தேதி நண்பகல் 12.00 மணியளவில் நீர் விநியோகம் முழுமையாக சீரடையும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்தது.

குடியிருப்பாளர்கள் இருக்கும் இடம் மற்றும் தொலைவைப் பொறுத்து நீர் விநியோகத் தடை மற்றும் விநியோகம் சீரடையும் நேரம் மாறுபடும் என்றும் ஆயர் சிலாங்கூர் தெளிவுபடுத்தியது.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு லோரிகள் மூலம் நீர் விநியோகம் வழங்கப்படும். இந்த சேவையில் சவ அடக்கச் சடங்கு நடைபெறும் இடங்கள், மருத்துவமனைகள், டயாலிசிஸ் மையங்கள் போன்ற இடங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இந்த நீர் விநியோக தடையை கருத்தில் கொண்டு பொது மக்கள் போதுமான அளவை நீரை சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதோடு தடை காலத்தில் நீரை விவேகத்துடன் பயன்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


Pengarang :