NATIONAL

மலேசியாவில் இருதய நோய்களால் அதிக மரணங்கள் பதிவு

புத்ராஜெயா, செப் 29- மலேசியாவில் பதிவாகும் மரணங்களில் இருதயம்
தொடர்பான நோய்களே முதலிடம் வகிக்கின்றன. கடந்த 2020ஆம்
ஆண்டில் பதிவான 18,515 மரணங்களில் 17 விழுக்காடு இருதய நோய்கள்
சம்பந்தப்பட்டவையாகும் என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர்
டத்தோ டாக்டர் முகமது ராட்ஸி அபு ஹசான் கூறினார்.

இருதய நோய்களுக்குச் செலவிடப்படும் தொகை அரசாங்கத்திற்கும்
பெரும் சுமையை அளிப்பதாக உள்ளது என்று அவர் சொன்னார். கடந்த
2017ஆம் ஆண்டில் மருத்துவ நோக்கங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட
965 கோடி வெள்ளியில் இருதய நோய் தொடர்பான சிகிச்சைகளுக்கு
மட்டும் 393 கோடி வெள்ளி செலவிடப்பட்டதை கடந்தாண்டு
வெளியிடப்பட்ட தொற்றா நோய் பராமரிப்பு செலவின அறிக்கை
காட்டுவதாக அவர் தெரிவித்தார்.

இருதய நோயைக் கட்டுப்படுத்துவதற்கான மற்றும் தடுப்பதற்கான
நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் இந்த செலவினம் தொடர்ந்து
அதிகரிக்கும் என்று இன்று அனுசரிக்கப்படும் அனைத்துலக இருதய
தினத்தை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில் அவர் குறிப்பிட்டார்.

இந்த இருதய விழிப்புணர்வு தினத்தை முன்னட்டு இருதயத்தை
பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் பிரசார நடவடிக்கைகளை
நாங்கள் மேற்கொள்ளவிருக்கிறோம். முன்கூட்டியே சிகிச்சை அளிப்பதற்கு
ஏதுவாக அந்நோயை தொடக்கத்திலேயே கண்டறிவதற்கான
நடவடிக்கைகளிலும் தீவிரம் காட்டவுள்ளோம் என்று அவர் சொன்னார்.

அந்த முன்னெடுப்பின் முதன்மை நடவடிக்கையாக 18 வயதுக்கும்
மேற்பட்ட 15 லட்சம் மலேசியர்களை இலக்காகக் கொண்டு தேசிய
சுகாதார பரிசோதனை இயக்கம் கடந்த 2022ஆம் ஆண்டு
அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.


Pengarang :