ECONOMYMEDIA STATEMENT

கடந்தாண்டில் தொழில்சார் காயங்கள் 58.9 விழுக்காடு அதிகரிப்பு- புள்ளிவிபரத் துறை தகவல்

கோலாலம்பூர், செப் 30. கடந்தாண்டில் தொழில்சார் காயங்கள் 58.9 விழுக்காடு அதிகரித்து 34,216 சம்பவங்களாகப் பதிவானது. அதற்கு முந்தைய ஆண்டில் இந்த எண்ணிக்கை 21,534ஆக  இருந்ததாக மலேசிய புள்ளி விபரத் துறை கூறியது.

கடந்த 2022ஆம் ஆண்டிற்கான தேசிய தொழில்சார் விபத்து மற்றும் நோய் தொடர்பான ஆய்வின் மூலம் இந்த தரவுகள் கிடைக்கப் பெற்றதாக மலேசிய புள்ளி விபரத் துறையின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் மஹிடின் உஸிர் கூறினார்.

கடந்த 2021ஆம் ஆண்டில் 1,000 பேருக்கு 1.43 ஆக இருந்த வேலையிட விபத்துகளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கடந்தாண்டு 1,000 பேருக்கு 2.22 ஆக உயர்ந்தது என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்தாண்டில் மரணம் இல்லாத வேலையிட விபத்துகளின் எண்ணிக்கை 59.7 விழுக்காடு அதிகரித்து 33,899 ஆக உயர்வு கண்டது. இதன் அடிப்படையில் வேலையிட விபத்துகளில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 1,000 பேருக்கு 2.22 பேராக கடந்தாண்டு பதிவானது என்றார் அவர்.

இதனிடையே, கடந்த 2022ஆம் ஆண்டில் மரணத்தை ஏற்படுத்திய வேலையிட விபத்துகளின் எண்ணிக்கை 317ஆகப் பதிவானதாக அவர் தெரிவித்தார். அதற்கு முந்தைய ஆண்டில் இந்த எண்ணிக்கை 301 பேராக இருந்ததையும் அவர் சுட்டிக் காட்டினார்.

கடந்தாண்டைப் பொறுத்த வரை வேலையிட விபத்துகளால் மரணடைவோரின் எண்ணிக்கை 1,000 பேருக்கு 2.06 பேராக உயர்ந்துள்ளது 2021 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 2 பேராக மட்டுமே இருந்தது என்று அவர் குறிப்பிட்டார்.

வேலையிட விபத்துகளில் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்களே எனக் கூறிய அவர், கடந்தாண்டு வேலையிட விபத்துகளில் சிக்கியவர்களில் மூன்றில் இரு பகுதியினர் (84.2 விழுக்காட்டினர்) ஆண்களாக உள்ள வேளையில் பெண்களின் எண்ணிக்கை 15.8 விழுக்காடாக உள்ளது என அவர் தெரிவித்தார்.


Pengarang :