SELANGOR

நீர் தூய்மைக்கேட்டைத் தடுக்க ஆற்றுப்படுகைகளில் லுவாஸ் சோதனை

ஷா ஆலம் அக் 4- நீர் தூய்மைக்கேட்டுப் பிரச்சனை ஏற்படாமலிருப்பதை
உறுதி செய்யும் நோக்கில் லுவாஸ் எனப்படும் சிலாங்கூர் நீர் நிர்வாக
வாரியம் சுங்கை கிள்ளான், சுங்கை சிலாங்கூர் மற்றும் சுங்கை லங்காட்
ஆகிய மூன்று ஆற்றுப்படுகைகளில் நேற்று கண்காணிப்பு பணிகளை
மேற்கொண்டது.

இந்த கண்காணிப்புப் பணி பூச்சோங், ஜாலான் கிள்ளான் லாமா, புக்கிட்
பெலிம்பிங், பெட்டாலிங் ஜெயா, செரண்டா, பத்தாங் காலி, சுங்கை
பஞ்சாலா மற்றும் உலு லங்காட் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டது.

நீர் ஆதாரங்கள் பாதுகாப்பாகவும் மாசுபாடு ஏற்படக்கூடிய சூழலைக்
கொண்டிராததையும் உறுதி செய்யும் நோக்கில் அந்த மூன்று ஆறுகளின்
நெடுகிலும் உள்ள வடிநிலங்களில் கண்காணிப்பு பணிகள்
மேற்கொள்ளப்பட்டன என்று லுவாஸ் தனது பேஸ்புக் பதிவில்
குறிப்பிட்டுள்ளது.

சோதனை மேற்கொள்ளப்பட்ட அந்த மூன்று ஆறுகள் மற்றும் நீரோடைகள்
பாதுகாப்பாகவும் மாசுபாடு இன்றியும் இருப்பது உறுதி செய்யப்பட்டது
என்று அது தெரிவித்தது.

நீரில் மாசுபாடு ஏற்படாமலிருப்பதை உறுதி செய்வதற்காக பாதிப்புக்கான
சாத்தியம் உள்ள பகுதிகளில் தொழில் துறைகளுக்கு உகந்த
உயர்தொழில்நுட்பம் கொண்ட டிரோன் சாதனங்களைப் பயன்படுத்தி
தாங்கள் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாக லுவாஸ்
கடந்தாண்டு ஜூலை மாதம் கூறியிருந்தது.

சுங்கை சிலாங்கூர், சுங்கை கிள்ளான் மற்றும் சுங்கை லங்காட் ஆற்று
வடிநிலங்களையொட்டியுள்ள 31 பகுதிகளில் இந்த கண்காணிப்பு
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


Pengarang :