SELANGOR

நான்கு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் முழுமையாகச் சரிசெய்யப்பட்டன – ஆயர் சிலாங்கூர்

ஷா ஆலம், அக் 11: இன்று காலை 9 மணி நிலவரப்படி நான்கு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் (எல்ஆர்ஏக்கள்) முழுமையாக சரிசெய்யப் பட்டதாகப் பென்குருசன் ஆயர் சிலாங்கூர் எஸ்டிஎன் பிஎச்டி தெரிவித்துள்ளது.

கோலா சிலாங்கூரில் நீர் விநியோக மீட்பு (97.9%), பெட்டாலிங்கில் (85.3%), ஷா ஆலம் (82%), கிள்ளான் (80.2%), கோம்பாக் (56%) மற்றும் கோலாலம்பூரில் (18.6%) என முகநூல் மூலம் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

“காலை 9 மணி நிலவரப்படி, பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர் வழங்கல் மறுசீரமைப்பு நிலை 72.8% ஐ எட்டியுள்ளது. அக்டோபர் 12 (வியாழக்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு நீர் விநியோகம் முழுமையாகச் சரிசெய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுங்கை சிலாங்கூரில் துர்நாற்றம் மாசு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, நான்கு எல்.ஆர்.ஏ.க்களுக்கு பணியை நிறுத்துமாறு ஆயர் சிலாங்கூர் நேற்று தெரிவித்தது.

ரந்தாவ் பஞ்சாங் எல்ஆர்ஏ அருகில் இரவு 11.15 மணியளவில் நடந்த சம்பவம், சுங்கை சிலாங்கூரில் குறைந்த மற்றும் தற்காலிகமாக எண்ணெய் கலப்பு ஏற்பட்டிருக்கலாம் என சுற்றுச்சூழல் எஸ்கோ ஜமாலியா ஜமாலுடின் தெரிவித்தார்.

அதன்படி, மாசுபாடு தொடர்பான முன்னேற்றங்கள் அவ்வப்போது தெரிவிக்கப்படும். ஆயர் சிலாங்கூர் செயலி, முகநூல், இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் மூலம் இந்த திட்டமிடப்படாத நீர் விநியோகத் தடங்கல் பற்றிய தகவலைப் பயனர்கள் பெறலாம் அல்லது 15300 என்ற எண்ணில் ஆயர் சிலாங்கூரை அழைக்கலாம்.

ஏதேனும் கேள்விகள் மற்றும் புகார்களை www.airselangor.com இணையதளத்தில் உள்ள உதவி மையத்திலும் ஆயர் சிலாங்கூர் செயலிலும் சமர்ப்பிக்கலாம்.


Pengarang :