NATIONAL

கல்வியை பாதியில் கைவிடும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது

கோலாலம்பூர், அக் 11- கல்வியை பாதியில் கைவிடும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த 2019 மற்றும் 2022க்கும் இடையே குறைந்து வருவதாக துணைக் கல்வியமைச்சர் லிம் ஹுய் யிங் கூறினார்.

ஆரம்பப் பள்ளிகளில்  கடந்த 2019ஆம் ஆண்டு 0.12 விழுக்காடாக இருந்த கல்வியைப் பாதியில் கைவிடும் மாணவர்களின் எண்ணிக்கை  கடந்தாண்டில் 0.7 விழுக்காடு குறைந்துள்ளதாக அவர் சொன்னார்.

அதே வேளையில் இடைநிலைப்பள்ளிகளில் கடந்த 2019ஆம் ஆண்டு 1.14 விழுக்காடாக இருந்த இந்த எண்ணிக்கை கடந்தாண்டு 0.99 விழுக்காடாக சரிவு கண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

கடந்த 2019 முதல் 2022 வரையிலான காலக்கட்டத்தில் ஆரம்பப் பள்ளிகளில் இரண்டாம், மூன்றாம் நான்காம் மற்றும் ஆறாம் ஆண்டு மாணவர்கள் மத்தியில் கல்வியைப் பாதியில் கைவிடும் போக்கு சற்று உயர்ந்து காணப்பட்ட வேளையில் இரண்டாம் மற்றும் ஐந்தாம் ஆண்டு மாணவர்கள் மத்தியில் குறைந்து காணப்பட்டது என்றார் அவர்.

இடைநிலைப்பள்ளி மாணவர்களைப்  பொறுத்த வரை கடந்த 2019 முதல் 2022 வரை இரண்டாம் படிவ மாணவர்கள் மத்தியில் கல்வியை கைவிடும் போக்கு அதிகரித்தது. அதேசமயம் படிவம் மூன்று, நான்கு மற்றும் ஐந்து மாணவர்கள் மத்தியில் இந்த எண்ணிக்கை சரிவைப் பதிவு செய்தது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மக்களவையில் இன்று பெட்டாலிங் ஜெயா தொகுதி பக்கத்தான் ஹராப்பான் உறுப்பினர் லீ சியேன் சுங் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.

கடந்த 2019 முதல் 2023 வரை கல்வியை  பாதியில் கைவிட்ட மாணவர்களின் எண்ணிக்கை, வயது மற்றும் பாலினம் குறித்த தகவல்களை வெளியிடும் அதேவேளையில் இப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்குமாறு லீ கல்வியமைச்சை கேட்டுக் கொண்டார்.


Pengarang :