NATIONAL

போலீஸ் போல் வேடமிட்ட கும்பலிடம் இளைஞர் 283,000 வெள்ளியைப் பறிகொடுத்தார்

கோலாலம்பூர், அக் 12- போலீஸ்காரர்கள் எனக் கூறிக்கொண்ட இணைய
மோசடிக் கும்பலிடம் இளைஞர் ஒருவர் 283,000 வெள்ளியைப் பறிகொடுத்தார்.
அதோடு மட்டுமின்றி, குடும்பத்தாரிடமிருந்து பிணைப்பணமாக 300,000
வெள்ளிப் பெறுவதற்கு ஏதுவாக தலைமறைவாகிவிடும்படி அந்த 18 வயது
இளைஞரை அக்கும்பல் பணித்துள்ளது.
அந்த இளைஞரின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் இம்மாதம் 5ஆம்
தேதி ஷா ஆலமில் உள்ள ஹோம் ஸ்தேய் எனப்படும் தங்கும் விடுதியில்
மிகவும் பயந்த நிலையில் பதுங்கியிருந்த அவரைத் தாங்கள் மீட்டதாக
புக்கிட் அமான் குற்றப்புலனாயவுத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது
சுஹைலி முகமது ஜைன் கூறினார்.
கடந்த மாதம் 30ஆம் தேதி அந்த இளைஞரைத் தொலைபேசி வழி தொடர்பு
கொண்ட போலீஸ்காரர் எனக் கூறிக் கொண்ட நபர், போதைப் பொருள்
அடங்கிய பொட்டலம் ஒன்று அவ்விளைஞரின் முகவரிக்கு வந்துள்ளதாகக்
கூறியுள்ளார்.
சட்ட நடவடிக்கை எடுக்கப்படாமலிருப்பதற்காக குறிப்பிட்டத் தொகையை
வழங்கும்படி அந்த மோசடிக் கும்பல் அவ்விளைஞரைப் பணித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்கி நான்கு
நாட்கள் தொடர்ச்சியாக இரு வங்கிக் கணக்குகளில் 283,000 வெள்ளியை
அந்த இளைஞர் செலுத்தியுள்ளார் என்று புக்கிட் அமானில் நேற்று
நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
அந்த இளைஞரால் இதற்கு மேலும் பணத்தைத் திரட்ட முடியாத
நிலையில் அவரை தலைமறைவாகி விடும்படி பணித்த அக்கும்பல்
அவரின் தாயாரின் தொலைபேசி எண்களைப் பெற்று அவரிடம் 300,000
வெள்ளி பிணைப்பணம் கோரியுள்ளது என சுஹைலி சொன்னார்.
இந்த கும்பலின் மோசடி நடவடிக்கைகளுக்குத் தங்களின் வங்கிக் கணக்கைக்
கொடுத்து உதவியதாக நம்பப்படும் 32 மற்றும் 24 வயதுடைய இருவரை
தாங்கள் கடந்த 7 மற்றும் 9ஆம் தேதிகளில் பினாங்கு மற்றும் கெடா
மாநிலத்தின் கூலிமில் கைது செய்ததாக அவர் குறிப்பிட்டார்.

Pengarang :