NATIONAL

நிதி நெருக்கடி காரணமகாச் சேவையை நிறுத்தியது மைஏர்லைன்ஸ்

கோலாலம்பூர், அக் 12- கடுமையான நிதி நெருக்கடி காரணமாக மலிவு
கட்டண விமான நிறுவனமான மைஏர்லைன்ஸ் இன்று தனது சேவையை
நிறுத்திக் கொண்டது. அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்த சேவை
நிறுத்தம் அமலில் இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்தது.

கடுமையான நிதி நெருக்கடி காரணமாகச் சேவையை நிறுத்தும் முடிவு
எடுக்கப்பட்டதாக இன்று காலை வெளியிடப்பட்ட அறிக்கையில்
அந்நிறுவனம் கூறியது.

மறு சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் நிறுவனப்
பங்குதாரர்களிடமிருந்து புதிய முதலீடுகளைப் பெறுவதற்கு ஏதுவாகவும்
இந்த சேவை நிறுத்தப்படுகிறது என்று அந்த அறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகைய முடிவை எடுப்பதற்கு ஏற்பட்ட நிர்பந்தத்திற்கு நாங்கள் மிகவும்
வருந்துவதோடு மன்னிப்பும் கோருகிறோம். எங்களின் விசுவாசமிக்க
பயணிகள், ஊழியர்கள் மற்றும் வர்த்தக பங்காளிகளுக்கு ஏற்பட்டுள்ள
விளைவுகளை நாங்கள் உணர்ந்துள்ளோம் என அது கூறியது.

விமானச் சேவை நிறுத்தப்படுவதைத் தவிர்ப்பதற்குப் புதிய பங்காளிகளைச்
சேர்ப்பது நிறுவனத்தை உருமாற்றம் செய்வது உள்ளிட்ட அம்சங்களை
நாங்கள் ஆராய்ந்தோம். எனினும் குறுகிய கால அவகாசம் காரணமாகச்
சேவையை நிறுத்தும் முடிவை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது
எனவும் அந்நிறுவனம் குறிப்பிட்டது.

இந்த நடவடிக்கையினால் சிரமத்தை எதிர்நோக்கியிருக்கும் தரப்பினருக்கு
உதவும் கடப்பாட்டை தாங்கள் கொண்டிருப்பதாகக் கூறிய அந்நிறுவனம்,
பயணத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் விமான நிலையத்திற்குச் செல்வதைத்
தவிர்க்கும் அதேவேளையில் மாற்று பயண ஏற்பாடுகளைச் செய்யும்படியும்
கேட்டுக் கொண்டது.


Pengarang :