NATIONAL

நாடு தழுவிய சோதனையில் இணைய சூதாட்டம், லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 1,871 பேர் கைது

கோலாலம்பூர், அக் 12- கடந்த மாதம் 22ஆம் தேதி தொடங்கி இம்மாதம் 5
வரை நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட இணைய சூதாட்டம் மற்றும்
பொது லாட்டரி விற்பனைக்கு எதிரான சிறப்பு “ஓப் டாடு“ நடவடிக்கையில்
1,871 பேர் கைது செய்யப்பட்டனர்.

அக்காலக்கட்டத்தில் இத்தகைய குற்றச்செயல்களுக்கு எதிராக 1,785
சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக புக்கிட் அமான்
குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது சுஹைலி
முகமது ஜைன் கூறினார்.

இரு வாரங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் 513,025
வெள்ளி மதிப்பிலான ரொக்கம், கணினிகள், கைபேசிகள் உள்ளிட்ட
பொருள்கள் இணைய சூதாட்டக் கும்பலிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக
நேற்று இங்குள்ள புக்கிட் அமானில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர்
கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

லைசென்ஸ் இன்றி பொது லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட
குற்றத்திற்காக 679,816 வெள்ளி ரொக்கம் மற்றும் சாதனங்கள்
கைப்பற்றப்பட்டன என்று அவர் மேலும் சொன்னார்.

இந்த சோதனை நடவடிக்கையில் 20 முதல் 60 வயது வரையிலான 1,559
ஆண்களும் 312 பெண்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும்
பொது இட சூதாட்ட சட்டத்தின் 4ஏ(ஏ) மற்றும் 9(1) பிரிவுகளின் கீழ்
விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டனர் என்றார் அவர்.

இம்மாதம் 5ஆம் தேதி வரை இணைய சூதாட்டம் மற்றும் பொது லாட்டரி
தொடர்பான 382 விசாரணை அறிக்கைகள் முழுமைப் பெற்று
சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட வேளையில் மேலும்
1,362 பேர் மீதான விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இதர 43 பேர் மீதான விசாரணை மேல் நடவடிக்கை இல்லை என வகைப்படுத்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.


Pengarang :